இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் காலையில் துவங்கியது. இந்திய அணியின் ஸ்கோரை காட்டிலும், சச்சினின் 100வது சதம் அடிப்பதை தான் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் 6 ரன்களில் இந்த முறையும் சதத்தை தவறவிட்டார் சச்சின். இதோடு சச்சின் 16வது முறையாக தனது 100வது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார் கஜினி என்பது வரலாறு. அதேபோல தனது நூறாவது சதத்தை எட்ட 16 முறை முயற்சி மேற்கொண்டுள்ளார் சச்சின் என்பது புதிய வரலாறு. கஜினி முகம்மது தனது 17வது முயற்சியின்போதுதான் போரில் வெற்றி பெற்றார். அதேபோல சச்சினும் தனது 17வது முயற்சியில் 100வது சதத்தை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கஜினி முகம்மதுவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.யாராவது தொடர்ந்து பெயில் ஆனால் அல்லது வெற்றி பெற முடியாமல் போனால், கஜினி என்று கூறி கிண்டலடிப்பார்கள். காரணம், வரலாற்றில் தோல்வியின் அடையாளமாக கூறப்படுபவர் கஜினி. ஆனால் உண்மையில் கஜினி ஒரு மாவீரன். தொட்டது எதையும் விட்டதில்லை என்பதே கஜினியின் வரலாறு.
இந்தியா மீது கஜினி 17 முறை படையெடுத்தான். ஆனால் அத்தனை முறையும் கொள்ளையடிக்க மட்டுமே படையெடுத்தான். நாடு பிடிக்கும் ஆசையில் அவன் படையெடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் குறி வைத்த நகரில் புகுந்து கொள்ளையடித்து விட்டே போயுள்ளான். இதனால் இந்தியாவை அவனால் பிடிக்க முடியவில்லை என்ற கருத்து உருவாகி விட்டது. 16வது முறையில் அவன் சோம்நாத் நகரைக் கைப்பற்றி சூறையாடினான். 17வது முயற்சியில், ஜாட் மன்னர்களை வீழ்த்தினான்.
இப்போது சச்சினும் கூட தொடர்ந்து தனது 100வது சதத்திற்காக போராடி வருகிறார். கடைசியாக 2011, ஜனவரி மாதம் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு சதம் போட்டார். அது அவருக்கு 99வது சதமாகும். அதன் பிறகு100வது சதத்தைத் தொட முடியாத நிலையில் இருக்கிறார் சச்சின். இதில் அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.
99வது சதத்திற்குப் பின்னர் இதுவரை 16 முறை முயற்சித்து விட்டார் சச்சின். ஆனாலும் 100வது சதத்தை அவரால் எட்ட முடியாத நிலையே காணப்படுகிறது. தற்போதைய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடியும் ஒரு இன்னிங்ஸிலும் அவரால் சதம் எடுக்க முடியவில்லை.
ஒரு வேளை கஜினி முகம்மது போல 17வது முயற்சியில் அலேக்கான வெற்றியைப் பெற்று விடலாம் என்று சச்சின் நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் சச்சினின் 100வது சதம், கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலும் கூட மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment