கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்துவிட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக் கூடிய போக்காகும்.
இந்த கடல் பகுதியில் காலங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பெயரைச் சொல்லி இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழப்பும், பலர் படுகாயங்களுக்கு ஆளாகியும், மீன் பிடித் தொழிலையே விட்டு விடுகிற அளவுக்கு நிலைமை முற்றியது. ஆனால் இலங்கை அரசு இப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறது.
இதற்குப் பிறகும் கூட, இலங்கை அரசை சேர்ந்த கப்பல் படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவது என்ன நியாயம்? இந்தக் கொடுமையில் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கிறபொழுது, இலங்கை அரசே இந்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இலங்கை அரசாவது அதிகாரி மட்டத்தில் இது பற்றி பேசி தீர்வு காணலாம் என்கின்றனர். ஆனால் இந்திய அரசின் கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கும்பொழுது நமது மீனவர்கள் இந்த கடல் பகுதியில் மீன்களையே பிடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நமது மீனவர்களை இந்திய கடலோர காவல் படையே தாக்கிய சம்பவங்களும் உண்டு.
கிணறு வெட்ட போய் பூதம் புறப்பட்டதைப் போல, நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்போய் முதலுக்கே மோசம் என்ற அடிப்படையில் இந்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே நம்முடைய மீனவர்களும் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு இந்திய அரசுக்கு இருக்குமானால் உடனடியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய இலங்கை கடல் பகுதியை இரு சாராரும் தாராளமாக மீன் பிடிக்க வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
1974 முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதத் தவறுவதில்லை. மத்திய அரசோ அவ்வப்பொழுது சமாதானம் சொல்வதும், இலங்கைக்கு தூதரை அனுப்பி வைப்பதும் வாடிக்கை. ஆனால் மீனவர்களின் வாழ்விலோ விடியல் ஏற்படவில்லை. இப்பொழுதாவது இந்திய அரசு தன் தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜெண்ட் போல செயல்படுவதை விட்டுவிட்டு இந்தியப் பிரஜைகளை காப்பாற்றுவதும், அவர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தருவதும் தன் முதல் கடமை என்று உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment