""பணம் கட்டி, "ரம்மி' விளையாடினாலும், போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது; ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்,'' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள மகாலட்சுமி கல்சுரல் அசோசியேஷன், கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸ் சோதனை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்த பின் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ராஜேஸ்வரன் விசாரித்தார்.
போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்:
போலீசார் நடத்திய சோதனையில், 56 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. 178 டோக்கன்களும், காசாளரிடம் இருந்து 6.75 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கை நடப்பது, நிர்வாகிகளுக்கும் தெரியும்' என கூறப்பட்டுள்ளது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அசோசியேஷன் உறுப்பினர்களும், விருந்தினர்களும் பணம் கட்டி, "ரம்மி' விளையாடுவது, அறிவு சார்ந்த விளையாட்டு என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் விளையாடுவது, "மங்காத்தா' என்பதால், அது சூதாட்டம் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஏற்கனவே, "13 சீட்டுகளை கொண்டு, "ரம்மி' விளையாடுவது என்பது, மூன்று சீட்டுகளை கொண்டு விளையாடுவது போல் அல்ல; இது ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு; பணம் கட்டி விளையாடலாம்' என, கோர்ட்டுகள் தீர்ப்பளித்துள்ளன.
பணம் கட்டி உறுப்பினர்கள், "ரம்மி' விளையாடினால், அவர்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கையை எடுக்க முடியாது. சூதாட்டம் நடப்பதாக ஆதாரம் கிடைத்தால், அசோசியேஷனுக்குள் போலீசார் நுழைந்து, ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளலாம். ஆய்வு என்ற பெயரில், அடிக்கடி அசோசியேஷனை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது. இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.
அசோசியேஷன் தாக்கல் செய்த மனு விவரம் :
இலக்கியம், கலாசாரம், விளையாட்டு நிகழ்ச்சிகளை, எங்கள் உறுப்பினர், விருந்தினர்களுக்கு நடத்துவோம். அதில், பணம் கட்டி, 13 சீட்டுகள் கொண்ட "ரம்மி' விளையாடுவர்; இது சூதாட்டம் அல்ல. எனவே, பணம் கட்டியோ, கட்டாமலோ 13 சீட்டுகளை வைத்து "ரம்மி' விளையாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறுக்கிட, போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment