"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி காரணமாக, கைது செய்யப்பட்டு ஆறு மாதமாக, திகார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமின் மனு, டில்லி ஐகோர்ட்டில், இன்று விசாரணைக்கு வருகிறது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தங்கள் ஜாமின் மனுவையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என, டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி வி.கே.ஷாலி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கனிமொழி சார்பில், வழக்கறிஞர்கள் அல்டாப் அகமது, சண்முகசுந்தரம் ஆஜராகினர். அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் சார்பிலும், வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, "ஜாமின் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என, கோருகிறீர்களா' எனக் கேட்டார். வழக்கறிஞர்கள் அனைவரும், "ஆம், இன்று (நேற்று) மனுவை விசாரிக்க வேண்டும்" என்றனர்.
இதையடுத்து, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரனிடம், நீதிபதி, "சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவு என்ன' என்று கேட்டார். உடனே, சுப்ரீம் கோர்ட் உத்தரவு முழுவதையும், நீதிபதி முன் பராசரன் படித்துக் காட்டினார். அதனைக் கேட்ட நீதிபதி, "இங்கு ஜாமின் மனு தாக்கல் செய்த அனைவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன என்று, கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெற்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார். இரு தரப்பினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, தாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் அனைவரும், குற்றச்சாட்டுகளின் தொகுப்பை, இன்றே சமர்ப்பித்து விடுகிறோம். அத்துடன், ஜாமின் மனு மீதான விசாரணையை, இன்றே (நேற்றே) நடத்த, நீதிபதி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். அதற்கு மறுத்த நீதிபதி, "உங்கள் கோரிக்கை, சமூகத்தில் செல்வாக்கோடு இருப்பவர்கள், தங்களுக்கு ஏற்ப நீதித்துறையை நிர்பந்திப்பர்' என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அதை, நான் அனுமதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்படையுங்கள். விசாரணையை நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு வைத்துக் கொள்ளலாம்' என்றார். இதை கேட்ட மூத்த வழக்கறிஞர் பராசரன், தன்னால், இன்று மதியம் வர இயலாது என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment