மத்திய அமைச்சர் சரத் பவாரை தாக்கிய சீக்கிய இளைஞர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ‘மற்றவர்களையும் மீண்டும் வந்து அடிப்பேன்’ என்று நீதிமன்றத்தில் அவர் ஆவேசமாக கூறினார். ஊழல் வழக்கில் சிக்கிய மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அப்போது, நீதிமன்ற வளாகத்தில் சுக்ராமை ஹர்விந்தர் சிங் என்ற சீக்கிய வாலிபர் தாக்கினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் போலீசார் விடுவித்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவாரையும் இந்த வாலிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். விலைவாசி உயர்வுக்கு பவார்தான் காரணம் என்பதால், அவரை தாக்கியதாக ஹர்விந்தர் சிங் கோஷமிட்டார். இந்த தாக்குதலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பவார் தாக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஹர்விந்தரை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அரசு ஊழியரை தாக்கியது, மிரட்டல் விடுத்தது, கிர்பானால் (சீக்கியர்களின் கத்தி) தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை அடுத்த மாதம் 9ம் தேதி வரை சிறை யில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஹர்விந்தரை போலீசார் நேற்று காலை ஆஜர்படுத்தியபோது, அவர் எதற்கும் கவலைப்படவில்லை. ‘பகத் சிங் ஜிந்தாபாத், ராஜ்குரு ஜிந்தாபாத்’ என்று நீதிமன்ற அறைக்கும் கோஷமிட்டபடி இருந்தார். மேலும், ‘பவாரை போல் மற்றவர்களையும் வந்து அடிப்பேன்’ என்றும் ஆவேசமாக கூறினார்.
கொந்தளிப்பு
நீதிமன்றத்துக்கு ஹர்விந்தரை அழைத்து வரும்போதும், சிறைக்கு அழைத்துச் செல்லும்போதும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தாக்க முயன்றனர். போலீசார் அதை தடுத்து, பாதுகாப்பாக சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.
No comments:
Post a Comment