மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர் கடந்த 21ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கொடுத்த புகார் மனுவில், “என் மனைவி ஜமுனா கலாதேவியை (29), சினிமா பாடலாசிரியர் சினேகன் கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தகாத செயலில் ஈடுபடுகிறார். அதனால் என் மனைவியை போலீசார் மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார், பாடலாசிரியர் சினேகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு பிரபாகரன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. வேளச்சேரியில் நடனப்பள்ளி நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தேன். அந்த நடனப்பள்ளி திறப்பு விழாவுக்கு பாடலாசிரியர் சினேகன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு அறிமுகமானார்.
பின்னர் அவர் நடிக்கும் “உயர்திரு 420” படத்தில் என்னை உதவி இயக்குனராக சேரும்படி என் கணவர்தான் கூறினார். அதன் பிறகுதான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அவருக்கு நடனப் பயிற்சி அளித்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. பிரபாகரன் என்னை கொடுமைப்படுத்தினார். அதை என்னால் தாங்க முடியவில்லை. நான் நடனப் பள்ளியில் பெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும்போது பிரபாகரன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வந்து எங்களை பார்த்து கிண்டல் செய்வார்.
ஒரு சைக்கோ போல நடந்து கொள்வார். இந்நிலையில்தான் “உயர்திரு 420” பட சூட்டிங் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். அவரிடம் சொல்லி விட்டுதான் சென்றேன். ஆனால் நான் திரும்பி வந்த பிறகு என்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் மகளை அழைத்து கொண்டு கிண்டியில் உள்ள எனது தாய் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்று விட்டேன். பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அனுப்ப வில்லை.
மகளை பார்ப்பதற்காக எனது தாய் வீட்டிற்கு வந்தார். மகளை அவருடைய மடிப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எனக்கு போன் செய்து, “இனிமேல் மகள் என்னுடன்தான் இருப்பாள், அவளை அனுப்ப மாட்டேன்“ என்றார். இதுபற்றி கடந்த 10ம்தேதி மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் அவர் கொடுத்துள்ள பொய் புகார் குறித்து மட்டும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சினேகனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னை யாரும் கடத்தவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. பொய் புகார் கொடுத்த பிரபாகரன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment