இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் மிகப் பரபரப்பான இறுதி நாள் ஆட்டத்தில் ஒரே ஒரு ரன்னை எடுக்க முடியாமல் இந்தியா ட்ரா செய்தது.
இந்த டெஸ்ட்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 590 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய மேற்கிந்திய தீவுகள், இன்று காலையிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 243 ரன்களை மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்தது.
கம்பீரும் சேவாக்கும் முதலில் களமிறங்கினர். கம்பீர் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மின்னல் வேகத்தில் அடித்து ஆடிய சேவாக் 65 பந்துகளில் 60 ரன்களை குவித்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
ராகுல் திராவிட் நின்று ஆடி 33 ரன்கள் எடுத்தார்.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சச்சின், 2வது இன்னிங்க்சில் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் அவரது இந்த 17 வது கஜினி முயற்சியும் கைகொடுக்கவில்லை. சச்சின் 3 ரன்களில் அவுட்டாகி, ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.
பட்டாசாக வெடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் டோணியும் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் 13 ரன்களில் அவுட் ஆனார். விவிஎஸ் லட்சுமணன் 31 ரன்கள் எடுத்தார்.
கோஹ்லி 63 ரன்கள் அடித்து வெற்றிக்கான நம்பிக்கையை அதிகரித்தார். வெற்றிக்கு 4 ரன்களே தேவை என்ற நிலையில் இஷாந்த் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழக்க, ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்துக்குப் போயினர்.
வெற்றிக்கு இரு ரன்கள், இரு பந்துகளில் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத அஸ்வின், கடைசி பந்தில் அவுட்டாகிவிட, ஆட்டம் ட்ராவில் முடிந்தது.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி தொடரில் இரு வெற்றி, ஒரு ட்ரா என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் ராம்பால் 3 விக்கெட்டுகளும், சாமுவேல்ஸ், பிஷோ தலா இரு விக்கெட்டுகளும் எடுத்தனர். எட்வர்ட்ஸ் 1 விக்கெட்டை எடுத்தார்.
No comments:
Post a Comment