கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி, வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு, அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு, போலீஸ் அனுமதி தரவில்லை. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்தின் நிறைவில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தோர் மீது, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், வள்ளியூர் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
எதிர்ப்பாளர்களால் ஆபத்து:
இதுகுறித்து, ஜெயக்குமார் அளித்த பேட்டி:ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (நேற்று) மாலை, பரமன்குறிச்சியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். கள்ளிகுளம் அருகே வந்தபோது, மாலை 4.06 மணிக்கு, என் அலைபேசிக்கு, 80159 37051 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவிலிருந்து பேசுவதாகக் கூறிய அவர், தன் பெயரை தெரிவிக்காமல், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். "அணு உலைக்கு ஆதரவாக போராடினால், கடலில் வெட்டி வீசி விடுவேன்' என, மிரட்டினார்.இதையடுத்து, 5.15 மணிக்கு, 94860 32115 என்ற எண்ணிலிருந்து, மற்றொரு அழைப்பு வந்தது. அதில் பேசியவரும், தன்னை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தவர் எனக் கூறி, "நீ கூடங்குளத்திற்கு வந்து விட்டு தான் செல்ல வேண்டும்; இல்லையென்றால்...' என, மிரட்டினார்.எனவே, அணு உலை எதிர்ப்புக் குழுவால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கும், அமைப்பின் நிர்வாகிகளுக்கும், போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என, வள்ளியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.வள்ளியூர் போலீசார், இதுகுறித்த விசாரணையை துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment