2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்று கூறி சுப்பிரமணியம் சாமி தொடர்ந்துள்ள வழக்கில் 8ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பாக சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரமும் கூட்டுச் சதி செய்துள்ளார். அவரும் முன்னாள் அமைச்சர் ராசாவும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது சாமியின் கோரிக்கையாகும்.
இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சாமி கோரியிருந்தார். அதை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ, சாமியிடம் அளித்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 100 பக்க ஆதார ஆவணத்தை சாமி நீதிபதியிடம் சமர்ப்பித்தார். பின்னர் அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியம் சாமி இதுகுறித்துக் கூறுகையில், ப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா மற்றும் ப.சிதம்பரத்திற்கு எதிரான சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்து 8ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றார்.
No comments:
Post a Comment