கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, தமிழக, கேரள எல்லைப் பகுதியில் தமிழக அதிரடிப் படைப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை வைத்து அங்குள்ள அரசியல் கட்சியினர் கேரள மக்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை அதிகரித்து வருகின்றனர். பிரவோம் இடைத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு காங்கிரஸும், இடதுசாரி முன்னணியும் இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறிவருகிறது. 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.
அதேபோல முல்லைப் பெரியாறு அணைக்கு வாகனங்கள் செல்லும் பாதையான வண்டிப்பெரியாறு அருகே உள்ள வல்லக்கடவில் நேற்று காலை பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி இடது புறத்தில் பேபி அணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்திய அவர்கள், பேபி அணையை உடைத்து, வாய்க்கால் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்காக, ஒரு குழுவினர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கைகளில் ஆயுதங்களுடன் வந்த பா.ஜ.க. இளைஞர் அணியினரை தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இத்தகைய வன்முறைச் செயல்களால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் பதட்டம் தொடர்கதையாகியுள்ளது.
இதையடுத்து எல்லைப் பகுதியில் அதிரடிப்படையை நிறுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்ட எஸ்.பி. பொறுப்பை வகிக்கும் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் அதிரடிப்படைப் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி செல்வராஜ் கூறுகையில், கேரளாவில் நடந்து வரும் வன்முறைப் போராட்டங்கள் தமிழகத்திற்கும் பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேனி மாவட்ட எல்லையான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மெட்டு ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளிலும் நேற்று மாலை முதல் துப்பாக்கி ஏந்திய அதி விரைவுப்படை போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment