பழைய படங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கு மத்திய-மாநில அரசுகள் தான் உதவ வேண்டும் என்று ஃபிக்கி மாநாட்டில், நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஃபிக்கியின் ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் 1 மற்றும் 2ம் தேதி நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடந்த இந்த விழாவை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார். ஃபிக்கியின் ஊடகம் மற்றும் தொழில்துறை தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் முடிவில் பேசிய கமல்ஹாசன், இந்தியா முழுவதும் திரைப்படத் தொழிலில் `டிஜிட்டல் முறை உருவாகி வருகிறது. இதனால் பழைய `ரீல் முறையை மாற்றி, நவீன யுக்திகளுடன் சினிமா எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 3,500 பழைய படங்களை அரசாங்க உதவிகள் இல்லாமல் `டிஜிட்டல் முறையில் பாதுகாத்துள்ளோம். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பழைய படங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பழைய படங்களை `டிஜிட்டல் முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும். `டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களைக் களைய இந்த மாநாட்டின் மூலம் விளக்கம் தரப்பட்டது.
இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சென்சார் போர்டு அதிகாரிகள் வந்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் இன்முகத்துடன் பதில் அளித்தனர். இந்த மாநாட்டின் மூலம் தயாரிப்பாளர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த 2 நாள் மாநாட்டில் திரைப்படத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கு (`பிக்கி) நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
No comments:
Post a Comment