பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் வரும் 24-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப் பாட்டம் நடத்துகின்றனர். மதிமுக, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. மதிமுக, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டம் அறிவிப்பு. தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் அதிகபட்சமாக ரூ.7 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம், தனியார் ஆம்னி பஸ் கட்டணம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஆவின் பால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டண உயர்வை கண்டித்து பல இடங்களிலும் மக்கள் மறியல், ஆர்ப்பாட்டம், அதிகாரிகள் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ்களில் பயணிகளுக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததாலும், முடங்கும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றவுமே கட்டண உயர்வு முடிவை எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசு தரப்பில் தேவையான உதவிகள் செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, Ôவிரைவில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்Õ என்று கூறியிருந்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த், பஸ் கட்டண உயர்வை கடுமையாக கண்டித்திருந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளதாகவும், பால் விலையை உயர்த்தியதுதான் வெண்மை புரட்சியா என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். மதுரையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய விஜயகாந்த், ‘கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்துவோம்’ என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களை பாதிக்கும் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 24-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகாந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அதே நாளில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையிலும் மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கட்டண உயர்வை கண்டித்து புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வரும்- 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால் விலையை குறைக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
No comments:
Post a Comment