அதிமுக அமைச்சர் பரஞ்சோதி மீது அவரது இரண்டாவது மனைவியான டாக்டர் ராணி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையின் எஸ்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக இருக்கும் ராணி என்பவர் அதிமுக அமைச்சர் பரஞ்சோதி மீது முதல்வர் தனிப்பிரிவு மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து ஆகியோரிடம் புகார் கொடுத்தார். பரஞ்சோதி அண்மையில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புகார் மனுவில் ராணி கூறியிருப்பதாவது,
பரஞ்சோதியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே என் குடும்பத்திற்கு பழக்கமானவர் பரஞ்சோதி. என் கணவருடன் பிரிந்து விவகாரத்து வாங்கி, ஆழ்ந்த வருத்தத்தில் நான் இருந்தபோது, ஆறுதல் சொல்ல வந்தவர் பரஞ்சோதி. அப்படி ஆறுதல் சொன்னவர் என்னுடன் நெருங்கி பழகி, என்னை திருமணம் செய்து கொண்டார்.
என்னை இரண்டாவது திருமணம் செய்த பின்னர் அவர் கேட்கும்போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை கொடுத்தேன். இந்நிலையில் அவருக்கு திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தந்தது. அப்போது என்னிடம் நான் ஜெயித்து அமைச்சர் ஆகிவிடுவேன். இரண்டாது மனைவி போன்ற விஷயங்கள் தலைமைக்கு பிடிக்காது, ஆகையால் நீ விலகிவிடு என்று கூறினார். மேலும் சிலரை வைத்து என்னை மிரட்டினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை திமுக தேர்தல் பிரசாரத்தின்போது பெரிதுபடுத்தியது. இருப்பினும் காவல்துறையும், முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
அதற்குப் பிறகும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியில் ராணி வழக்கறிஞர் இமயவள்ளி என்பவர் உதவியோடு திருச்சி ஜே.எம் 4 நீதிமன்ற மாஜிஸ்திரேட் புஷ்பராணியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உறையூர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment