நான் வேட்டியை மடித்துக் கட்டும் கேரக்டர். சிறைகளை நிரப்ப தேமுதிகவினர் தயாராக இருங்கள் என்று இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் அதிமுக அரசுக்கு எதிராக தீவிரமாக களம் குதிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இன்று காலை 8 மணியளவில் விஜயகாந்த் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதம் இருப்பதற்காக வந்த விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது விஜயகாந்த் கூறுகையில்,
தமிழகத்தில், ஏழை மற்றும் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக ஏழை குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டணம் முன்பை விட இருமடங்கு உயர்ந்திருப்பதால் சென்னையில் பஸ் எல்லாம் காலியாகப் போகிறது.
எங்களுக்கு உண்ணாவிரதம் இருக்க சரியான இடத்தை காவல்துறை ஒதுக்கவில்லை. மாறாக கூவம் அருகே உண்ணாவிரதம் இருக்க இடம் கொடுத்தார்கள். இதனால்தான் அங்கு நான் போகாமல் எங்களது கட்சித் தலைமை அலுவலகம் முன்பே உண்ணாவிரதம் இருக்கிறோம்.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லை என்றார் விஜயகாந்த்.
பின்னர் மாலை 4 மணியளவில் விஜயகாந்த் மைக்கைப் பிடித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்தால், கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்கள். இரட்டை வேடம் போடுவது யார்? 100 நாள் ஆகிவிட்டது விஜயகாந்த் பாராட்டவில்லை. 100 நாள் ஆட்சியில் என்ன சாதீத்தீர்கள் பாராட்டுவதற்கு. அதற்குத்தான் அன்றைக்கே சொன்னேன் 6 மாதம் ஆகட்டும் ஆட்சியைப் பற்றி சொல்கிறேன் என்று.
சமச்சீர் கல்வி கொண்டுவரக் கூடாது என்பதற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள். புதிய சட்டமன்றத்தை பூட்டி வைத்திருக்கிறீர்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகிறோம் என்கிறீர்கள். அதை ஏன் மாற்றுகிறீர்கள் என்றால் மருத்துவமனை வரும் என்கிறார்கள். மருத்துவமனை அமைக்க இடம் இல்லையா.
இதற்கெல்லாம் செலவழிக்கும் பணத்தை மாற்றி பால் விலை உயர்வை தடுக்கலாம் இல்லையா. பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள். அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். அதை கண்டுபிடியுங்கள்.
பால் விலை உயர்த்தியது ஏன். பஸ் கட்டணத்தை உயர்த்தியது ஏன். பத்திரிகையாளர்கள் அனைவரும் இதனை கண்டித்து எழுத வேண்டும். இதனை கண்டித்து தேமுதிக போராடும். தேமுதிக தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டும். நான் வேட்டியை மடித்துக் கட்டி இறங்குகிற கேரக்டர்.
அம்மா என்றால் அன்பு என்று நான் பாடவில்லை. அந்த அம்மாதான் பாடினார்கள். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அந்த பால் விக்கிற விலைய பாரு.
ஒரு வருடத்துக்கு முன்பு சொன்னேன். நான் தலை குனிந்தாலும், தேமுதிக தொண்டர்களை தலைகுனிய வைக்க மட்டேன் என்று சொன்னேன். அதுப்போலவே நான் தான் போனேன். நான் தான் வந்தேன். இன்றும் தேமுதிக தொண்டர்களை தலைக்குனிய வைக்கவில்லை என்று பேசினார் விஜயகாந்த்.
பின்னர் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது. அப்போது மைக்கில், வழக்கமாக உண்ணாவிரதம் முடியும்போது மோர் தருவார்கள் ஆனால் பால் விலை உயர்வு காரணமாக கேப்டன், எலுமிச்சை ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார் என்று அறிவித்தனர். அதன் படி ஒருசிறுமி எலுமிச்சை ஜூஸை விஜயகாந்த்திடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக் குடித்து போராட்டத்தை முடித்தார்.
No comments:
Post a Comment