அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்று அவரை முன்பு கடுமையாக விமர்சித்த முதல்வர் ஜெயலலிதா தற்போது அதை மறந்து விட்டதாக தெரிகிறது. நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த அத்வானி ரத யாத்திரை நிறைவு கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பித்துரை எம்.பி கலந்து கொண்டு அத்வானியை வாழ்த்தினார். மேலும், ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தார்.
இது தம்பித்துரையின் குரலா அல்லது ஜெயலலிதாவின் குரலா என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவ்வப்போது காங்கிரஸுக்கு திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் நான் இருக்கிறேன் காப்பாற்ற என்று கூறி வந்தார் ஜெயலலிதா. இருப்பினும் காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தியுடன் டீ பார்ட்டியில் ஜெயலலிதா பங்கேற்பார் என்ற தகவல் பரப்பப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் தரப்பு மறுத்து விட்டது.
அதன் பின்னர் காங்கிரஸ் மீது கடுப்பானார் ஜெயலலிதா. இந்த நிலையில், சமீ்பத்தில் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர் ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியின் அலங்கோலம் மற்றும் மத்திய அரசு கேட்ட நிதியைத் தராததே இதற்குக் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.
இப்படிப்பட்ட பின்னணியில் தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது அதிமுக. காங்கிரசுடனான எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையிலேயே பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக நெருங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக ஊழலுக்கு எதிராக ஜனசேத்னா யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாக சனிக்கிழமையன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுதே, டெல்லியில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் தமது கட்சி சார்பில் யாராவது ஒருவர் பங்கேற்பர் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மதுரை அருகே அத்வானி ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டது தமிழக காவல்துறை. மேலும் குண்டைக் கண்டுபிடித்தவர்களுக்கு நேரில் அழைத்துப் பரிசளித்துக் கெளரவித்தார் ஜெயலலிதா. அத்வானியும் ஜெயலலிதாவைப் பாராட்டினார்.
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எம்.பி தம்பித்துரை ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
2ஜி ஏற்படுத்திய புரட்சி
மத்திய அரசில் மலிந்து கிடக்கும் ஊழல் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அத்வானி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார்.
அத்வானியின் யாத்திரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எழுப்பிய 2 ஜி அலைக்கற்றை முறைகேட்டுப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேட்டுப் பிரச்னையால் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
ஊழல் அரசை அகற்றுங்கள்
தமிழகத்துக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. ஊழலை ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. இதில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஊழல் மலிந்த மத்திய அரசை மக்கள் அகற்ற வேண்டும் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
கூட்டணி ஏற்படுமா ?
பாஜக மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக உறவு பாராட்டி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உறவு வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா? என்ற கேள்வி டெல்லி வட்டாரங்களில் இப்பொழுதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான முந்தைய உறவு கசந்தபோது அத்வானியை கடுமையாக விமர்சித்திருந்தார் ஜெயலலிதா. அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதை மறந்து இரு தரப்பும் நெருங்கி வருவது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment