மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி கடுமையாக கூறியுள்ளார்.
கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின்போது மிகக் கடுமையாக கனிமொழி உள்ளிட்டோர் குறித்து கருத்து தெரிவித்தார் நீதிபதி ஷைனி.
நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்ட வாசகங்கள்:
- குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார். எம்.பியாக இருக்கிறார்.
- அவர் ஒரு பெண் என்றும்,அவர் கஷ்டப்படுகிறார் என்றும் கூறுவது கற்பனையாகும்.
- வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளுக்கு பாதுகாப்பு உணர்வும், பயமின்மையும் இருக்க வேண்டும். அதற்குகுற்றம் சாட்டப்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கப்பட வேண்டியது முக்கியமாகும்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் முக்கிய நோக்கமே, பொதுமக்களின் பணத்தை எடுத்து தங்களது சுய லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவே இருந்துள்ளது. அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை கிடையாது.
- வழக்கின் உண்மை நிலவரம், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிறந்த நீதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
- இவர்களுக்கு ஜாமீன் தர சிபிஐ ஆட்சேபனை கூறவில்லை. அதற்காக ஜாமீன் தர வேண்டும் என்று அர்த்தமோ, கட்டாயமோ இல்லை.
- குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை, தீவிரமானவை. நாட்டின் பொருளாதாரத்தில் இவர்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
- இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவித சலுகையும், பரிவும் காட்ட வேண்டியதில்லை. எந்தவிதமான அனுதாபத்திற்கும் இவர்கள் தகுதியவற்றவர்கள் ஆவர். மிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இவர்கள் தங்களது குற்றங்களைச் செய்துள்ளனர்.
- பெருமளவில் மக்கள் பணத்தை சூறையாடி விட்டு, சிறைக்குப் போய் சில காலம் இருந்து விட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நினைப்பில் ஜாமீன் கோருபவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இவர்களைப் போல மேலும் பலர் பெருமளவில் கிளம்ப காரணமாகி விடும். எனவே இதுபோன்ற ஒயிட்காலர் குற்றங்களைச் செய்வோருக்கு ஜாமீன் தரவே கூடாது என்பதே நீதிமன்றத்தின் கருத்தாகும். அதுதான் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய நினைப்போருக்கு சரியான பாடமாக இருக்கும் என்றார் நீதிபதி ஷைனி.
No comments:
Post a Comment