2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 2ஜி ஊழல் வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதனால் கனிமொழி விடுதலையாகக்கூடும் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தில்லி வந்தனர். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவரை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் தில்லி வந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் அவரது ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்துக்கு வந்திருந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியாவதால் இன்று காலை சிபிஐ நீதிமன்றத்துக்கு கனிமொழி அழைத்து வரப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment