பார்லிமென்ட் வரை பெரும் புயலை ஏற்படுத்தி இருக்கும் டேம் 999 படத்தை, திரையிட தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் படத்தை எதிர்ப்பவர்கள் அதற்கு முன்பாக படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்றும், இந்த படத்தை 24.11.2011 இன்று , தமிழக அரசுக்கும், இதை தடை செய்யக்கோரும் அனைத்து அன்பர்களுக்கும் திரையிட்டுக்காட்ட தயாராக உள்ளேன் என்று படத்தினை வெளியிடும் மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.
மலையாள டைரக்டர் சோஹன் ராய் இயக்கத்தில், விமலா ராமன், ஆஷிஸ் வித்யார்ஜி உள்ளிட்டவர்களுடன் ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்து இருக்கும் படம் டேம் 999. இந்தபடத்தில் அணை ஒன்று உடைவது போன்றும், அதில் லட்சக்கணக்கான பேர் பலியாவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் இந்தக்காட்சிகள் முல்லைப்பெரியாறு அணையை சித்தரிப்பது போன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இந்தபடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.தமிழகத்தில் இந்தபடத்தை திரையிட விடமாட்டோம் என்று மதிமுக., திமுக., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் இந்த படத்தை திரையிட போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தை எதிர்ப்பவர்களுக்கு, டேம் 999 படத்தை திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறோம் என்று டேம் 999 படக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ், தெலுங்கு மொழியில் படத்தை வெளியிடும் மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மக்களுக்கு வணக்கம்...., நான் பிஸ் நெட்வொர்க் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆங்கில படம் டேம் 999. இதில் தமிழ் நடிகர்களும், ஹாலிவூட் நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் .ஒரு அனைக்கட்டு உடைந்தால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை இந்த படம் விளக்குகிறது. பூர்ணிமா சங்கர் எக்ஸிம் என்ற பட நிறுவனம் சார்பில், மஹாலிங்கம் எனும் நான் இந்த திரைப்படத்தின் தென்னிந்திய உரிமையை பெற்று, அதை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறேன்.
இந்த திரைப்படத்தை தடை செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் 22.11.2011 அன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . முல்லைப்பெரியாறு அணை உடைந்து, தமிழக மக்கள் பலியாவது போல, திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளதாக அவர்களின் கருத்து. இந்த டேம் 999 திரைப்படத்தில் காண்பிக்கபடுவது முல்லைப்பெரியாறு அணை அல்ல. அதன் சாயலில் கூட அது இல்லை. தமிழ்நாடு, கேரளா என்ற மாநிலங்களின் பெயர்களும் படத்தில் இடம் பெறவில்லை. டேம் 999 என்பது, படத்தில் அந்த டேம் திறப்பு விழாவின் தேதியான 09.09.09-ஐ குறிப்பதாகும். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன் .
தமிழ்நாட்டில் பிறந்து தமிழனாக வாழும் நான், தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுவதற்கு ஒரு போதும் துணை போக மாட்டேன். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய விதத்தில் தான் டேம் 9999 உருவாகியுள்ளது. தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு யு சான்று அளித்துள்ளனர். இந்த திரைபடத்தை தடை செய்ய சில தரப்பினர் கோருவது துரதிருஷ்ட வசமானது .இந்த திரைப்படத்தில் தமிழர்களின் உணர்வுகள் புண்படுத்தபடவில்லை என்பதையும், இது முல்லை பெரியாறு அணை பற்றிய படம் அல்ல என்பதையும் அனைவரும் தெரிந்து கொள்ள இந்தபடத்தை 24.11.2011 (இன்று), தமிழக அரசுக்கும், இதை தடை செய்யக்கோரும் அனைத்து அன்பர்களுக்கும் திரையிட்டுக்காட்ட தயாராக உள்ளேன். தயவு செய்து இதை எதிர்க்கும் அன்பு நெஞ்சங்கள், இந்த திரைப்படத்தை பார்த்து உண்மையை அறிந்து கொண்டு, இந்த திரைப்படமான டேம் 999-ஐ வெளியிட முழு ஒத்துழைப்பு தருமாறு மனமார வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment