2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் பதவி விலகிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்கள் இன்னும் காலியாகே உள்ளன. கனிமொழி கைது நடவடிக்கையால் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, அந்த இடங்களை நிரப்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்த இடங்கள் திமுகவுக்காக எப்போதுமே காத்திருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.
இந் நிலையில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கனிந்திருப்பதால், திமுக தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பலம் மிகுந்த இந்தக் கட்சிக்கு மொத்தம் 60 இடங்களை விட்டுத் தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டணியை அமைப்பதற்கு பிரதிபலனாக, மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கிறார் அஜீத் சிங். இதனால் அவர் விரைவிலேயே மத்திய அமைச்சராக்கப்பட உள்ளார்.
இதற்காக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது, தயாநிதி, ராசாவுக்குப் பதிலாக இருவரை மத்திய கேபினட் அமைச்சர்களாக்க திமுக தலைவர் கருணாநிதி ஒப்புக் கொள்வார் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ஆனால், கனிமொழி ஜாமீன் விஷயம் தள்ளிப் போகும்பட்சத்தில் அடுத்த சில வாரங்களில் அஜீத் சிங்கை மட்டும் அமைச்சராக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment