சென்னை நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்பத்தினரை ஆபாசமாக விமர்சித்தும் பேசிய வழக்கில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஊட்டி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து ஒரு செய்தி வந்தது. அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். இந்த செய்தியைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது திமுக அரசின் உத்தரவின் பேரில் அதி வேகமாக செயல்பட்ட போலீஸார், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. ரஜினிகாந்த் முன்னிலையி்ல் நடந்த இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகக் கேவலமாக நடிகர்கள் பலர் பேசினர். குறிப்பாக சிரிப்பு நடிகர் விவேக்கின் ஆபாசப் பேச்சு பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கொதிக்க வைத்தது.
பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் என்று சூர்யா விமர்சித்தார். இப்படி ஒவ்வொருவரும் ஆபாசமாக பேசினர். சத்யராஜின் பேச்சும் வக்கிரமாகவே இருந்தது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் வருகிற டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ரொசாரியோவின் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே அவர்கள் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.
இந்த சம்மன் உத்தரவின் மூலம் கிடப்பில் போடப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment