இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் இன்று அவரது பாட்டியும், இளையராஜாவின் தாயாருமான சின்னத்தாயின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்புகிறது.
இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படுகிறது. மாலை 5 மணி வாக்கில் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பண்ணைப்புரத்தில் உள்ள இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகிலேயே ஜீவாவின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.
இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.
இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே நின்றிருந்தார்.
லோயர் கேம்ப் பகுதியில் உள்ள சின்னத்தாயி சமாதி அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி பண்ணைப்புரம் மக்கள் பெரும் சோகத்துடன் காட்சி அளிக்கின்றனர்.
No comments:
Post a Comment