காயங்களும், கனவுகளும் தான் அரவான் என்று கூறியுள்ளார் நடிகர் ஆதி. மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலோ என்னவோ, அரவான் படத்தில் மிருகமாகியே போனார் ஆதி. அரவான் படத்திற்காக ரொம்பவே உடலை வருத்தி, அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்திற்காக தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்தேன் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அதி...
அரவான் படத்திற்காக இரண்டு வருடங்களாக தாடியில் தொடங்கி, தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் கிடந்து, உடல் இளைத்து, மெருகேற்றி ஓடி ஓடி உழைத்தேன். என்னை முற்றிலும் தயார் படுத்தி விட்டோம் என்று நினைத்தபோது, சூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்தது பெரிய சவால். படத்தின் காட்சியை பற்றி டைரக்டர் கூறும்போது, அதில் எப்படி நடிக்க போகிறோம் என்று ரொம்பவே பயந்தேன். பின்னர் மனதளவில் என்னை தயார்படுத்தி முழு ஈடுபாட்டோடு நடித்தேன். ஒரு காட்சியின் போது, கையில் பலத்த அடி, இருந்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வலியோடு நடித்தேன்.
அப்புறம் படத்தில் என்னுடைய ஓபனிங் காட்சியில், ஒரு வீட்டின் புகை கூண்டில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சி. அந்தகாட்சியில் நடித்தது ரொம்பவே சவாலாக இருந்தது. அதிலும் குறிப்பாக 80கிலோ எடையுள்ள கன்றுக்குட்டியை தூக்கி ஓடும் போது, முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனை இன்று வரை சரியாகவில்லை. இப்படி படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடித்தேன். நான் மட்டுமல்ல, டைரக்டர் வசந்தபாலன், ஆதி, தன்ஷிகா உள்ளிட்ட அத்தனைபேரும் நிறைய உழைச்சிருக்காங்க. அரவான் படத்தின் சூட்டிங், மொத்தம் 140நாள் நடந்தது. இதில் எத்தனை பேர் காயம்பட்டார்கள் என்று கணக்கு போட முடியாது. தினமும் இரத்தம் பார்க்காமல் சூட்டிங் முடியாது. அந்தளவுக்கு படத்திற்காக உழைச்சிருக்கோம்.
நான் நடித்த படங்களிலேயே இந்தளவுக்கு கஷ்டப்பட்டு எந்த படத்திலும் நடித்ததில்லை. இனிமேல் நடிக்க இருக்கும் படத்தில் இப்படி கஷ்டப்பட்டு நடிப்பேனா...? என்று எனக்கு தெரியாது. இப்படியொரு படத்தில் எனக்கு, நடிக்க வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வசந்தபாலனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மொத்தத்தில் படத்தை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் காயங்களும், கனவுகளும் தான் அரவான் என்று கூறி நெகிழ்கிறார் ஆதி.
No comments:
Post a Comment