அமைச்சர்களும், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், காவல்நிலையத்திற்கே சென்று காவல்துறை நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதற்கு ஜெயலலிதாவின் பதில் என்ன என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்ற உண்மையான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவல்துறையினரின் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடு கூடாது என்ற ஜெயலலிதாவின் அறிவுரைக்கும், நடைமுறைக்கும் எள்ளளவு சம்பந்தமும் இல்லை.
திமுக ஆட்சியில் மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் மிகச் சாதாரண குற்றம் ஒன்றுக்காக கைது செய்தபோது, பத்திரிகை ஆசிரியரை தகுந்த காரணமின்றி கைது செய்ய வேண்டாம் என்று காவல்துறையினருக்கு நான் கூறினேன். அதற்கு காவல்துறையின் நடவடிக்கையில் குறுக்கீடு என ஜெயலலிதா கடுமையாக சாடினார்.
ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் சென்னையிலுள்ள காவல்நிலையத்துக்கே அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் சென்று கட்சிகாரர்களை விடுவித்து அழைத்துச்சென்றனர். மதுபாட்டில்கள் பதுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் அமைச்சர் ஒருவர் தலையிட்டு அவர்களை விடுவிக்க நிர்பந்தம் செய்ததும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
மூத்த பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய வேண்டாம் என்று கூறியதை குறுக்கீடு என்று அறிக்கை விட்ட ஜெயலலிதா, தற்போது அவரது ஆட்சியில் நடைபெறும் இத்தகைய செயல்பாடுகள் பற்றி என்ன பதில் கூறுகிறார்?
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தோல்விடையந்த அதிமுகவினருக்கு அதிகாரிகள் வெற்றி சான்றிதழ் வழங்கிய கொடுமை பல இடங்களில் அரங்கேறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு 34 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், திமுகவிற்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், சுயேச்சைகள் பெற்ற வாக்குகளை அதிமுகவின் கணக்கில் சேர்த்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்றும் இதழ் (நக்கீரன்) ஒன்று புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இனிமேலாவது தேர்தல் ஆணையம் உண்மையான புள்ளி விவரத்தை வெளியிடும் என்று நம்புகிறேன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா, டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறி, கடந்த 22ஆம் தேதி மூன்றாவது நாள் விசாரணையைத் தவிர்த்துள்ளார். ஆனால் அவர் அன்றைய தினம் டெல்லிக்கு செல்லாமல் இருந்ததன் மூலம் உண்மைக்கு மாறான செய்தியை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment