பிரபல டைரக்டர் மணிரத்னம், தான் அடுத்த இயக்க போகும் படத்திற்கு புதுமுக நடிகை ஒருவரை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஒருத்தரும் கிடைத்தபாடில்லை. தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இந்தியிலும் பல படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். மணிரத்னம் படம் என்றாலே எப்பவும் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் "ராவணன்" படத்திற்கு பிறகு "பொன்னியின் செல்வன்" படத்தை கையில் எடுத்தார் மணிரத்னம். ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்தபடம் கைவிடப்பட்டது. இதனையடுத்து இந்திய மீனவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி, ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்திற்கான முழு கதையையும் தயார் செய்துவிட்டார்.
படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் எண்ணம். அதன்படி ஹீரோவாக நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் அறிமுகம் ஆகிறார். ஹீரோ கிடைத்த போதிலும், கவுதமிற்கு ஏற்ற ஹீரோயின் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. ஆரம்பத்தில் கமல்ஹாசனின், 2வது மகள் அக்ஷ்ராஹாசனை அணுகினார் மணி. ஆனால் அக்ஷராவோ, நடிப்பை காட்டிலும் டைரக்ஷ்னில் தான் ஆர்வம் என்று கூறிவிட்டார். அதுமட்டுமின்றி தனது அப்பா இயக்கும், "விஸ்வரூபம்" படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
இதனையடுத்து, நடிகை ராதாவின் 2வது மகள் துளசியை நடிக்க வைக்க எண்ணினார் மணிரத்னம். "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் கார்த்திக்கும்-ராதாவும் அறிமுகமானது போல், இந்தபடத்திலும் அவர்களது வாரிசுகளை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் ராதாவோ தனது மூத்த மகள் கார்த்திகா ஒரு நல்ல நிலைக்கு வந்தபின்னர், 2வது மகள் துளசியை நடிக்க வைக்கலாம் என்று கருதுகிறார்.
அக்ஷ்ரா, துளசி இரண்டுபேரும் நடிக்க மறுக்க, மணியின் பார்வை இப்போது பார்த்திபனின் மகள் கீர்த்தனா மீது திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் தொட்டே கீர்த்தனாவை எல்லோரும் அறிவர் என்பதால், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க மணிரத்னம் விரும்புவதாகவும், எனவே கீர்த்தனாவுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆகமொத்தத்தில் மணிரத்னம், தன்னுடைய படத்திற்கான நடிகை வேட்டையை இன்னும் முடித்தபாடில்லை என்பது மட்டுமே உண்மை.
No comments:
Post a Comment