மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மீது டெல்லியில் இன்று நடந்த தாக்குதல் குறித்து அன்னா ஹஸாரேவிடம் செய்தியாளர்கள் கருத்து சொல்லுங்களேன் என்று கேட்டபோது, ஒரே ஒருஅடிதானா என்று திருப்பிக் கேட்டார் அன்னா. பின்னர், என்ன இருந்தாலும் இந்தத் தாக்குதல் தவறானது என்று கண்டித்தார்.
எங்கள் ஊரில் குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து உதைப்போம் என்று சில நாட்களுக்கு முன்புதான் கூறியிருந்தார் அன்னா. அதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த நிலையில் டெல்லியில் இன்று அமைச்சர் பவாரை ஹர்விந்தர் சிங் கன்னத்தில் பளார் என அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் பின்னர் கூறுகையில், அன்னா ஹஸாரேதான் நாட்டு மக்களிடம் கையெடுத்துக் கும்பிடுகிறாரே, அவர் சொல்வது போல லோக்பால் மசோதாவை கொண்டு வாருங்கள். ஊழலை ஒழியுங்கள்,மக்களை பசி, பட்டினியிலிருந்து காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பினார்.
இதுகுறித்து இன்று அன்னாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதைக் கேட்ட அன்னா, ஒரே ஒரு அடிதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். பி்ன்னர் சுதாரித்துக் கொண்டு, என்னதான் இருந்தாலும் ஒருவரை உடல் ரீதியாக தாக்குவது என்பது சரியல்ல. தாக்குதல் நடத்தியவரின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் அடித்தது தப்புதான். இது ஜனநாயக நாடு, இதை அனுமதிக்க முடியாது.அகிம்சையை யாரும் கடைப்பிடிக்க முடியாது என்றார் அன்னா.
பவாரை அடித்ததை அன்னா கண்டித்தாலும் கூட கண்டிப்பதற்கு முன்பு அவர் கேட்ட ஒரே ஒரு அடிதானா என்ற கேள்வி பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment