தமிழ் படங்களின் கதைகளை தெலுங்கு இயக்குனர்கள் திருடுவதாக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றம் சாட்டினார். கே.விஜயநந்தா இயக்கத்தில் விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் “விளையாடவா” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:-
கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லாத நிலைமை உள்ளது. இப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கமலேஷ்குமார் என்னுடன் பத்து வருடங்களுக்கு மேல் திரைக்கதை விவாதத்தில் பங்கேற்று பணிபுரிந்து இருக்கிறார். நிறைய கதைகளும் எழுதி உள்ளார். ஆனாலும் இன்னும் அவர் திறமைகள் வெளிப்படாமல் உள்ளது. கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும்.
அந்த கதையை தெலுங்கில் திருடி படம் எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில் வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வருவது போல் காட்சி இருந்தது. இது “எதிரி” படத்தின் கதை. இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர். இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.
தனுஷ் நடித்த “உத்தம புத்திரன்” படத்தில் இது போன்று மணமகளை கடத்தும் காட்சியும் பொல்லாதவன் படத்தில் பைக் சம்பந்தப்பட்ட சீன்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தான் கே.எஸ்.ரவிக்குமார் திருட்டு கதை என்று பேசியதாக கூட்டத்தினர் முனுமுனுத்தனர்.
விளையாடவா பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா, திரிபுரசுந்தரி, நடிகர் பொன்வண்ணன், நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment