நாட்டின் முக்கியப் பிரச்னைகளுக்கு சுயேச்சையாக, துணிச்சலாக, உடனுக்குடன் முடிவெடுக்கும் தலைமை இல்லையே, என விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி கவலை தெரிவித்தார்.
தினசரி மாறி மாறி ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளியே வருவதால் இந்த நாட்டின் நிர்வாகத்தின் மீது உலக நாடுகளிடையே நம்பிக்கை தளர்ந்துவிடும்; அதன் பிறகு நம்முடைய அந்தஸ்து சர்வதேச அரங்கில் குறைந்துவிடும்.
இந்த நிலைமையை அனைவரும் மாற்ற வேண்டும். நாட்டின் நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும், என்று வலியுறுத்தி சில தினங்களுக்கு முன் தொழிலதிபர்கள் அசீம் பிரேம்ஜி, கேசவ் மகேந்திரா, தீபக் பரேக் உள்ளிட்டோர் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
இதன் எதிரொலி்யாக நம்முடைய சொந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக பொருளாதார முன்னேற்றம் தடைபட்டுவிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதனை தரித்து, மீண்டும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இரண்டாவது கடிதம் எழுதியுள்ளனர் இந்தத் தொழிலதிபர்கள்.
இந்த நிலையில்தான், நாட்டின் 'தலைமை' குறித்து கவலை தெரிவித்துள்ளார் அசீம் பிரேம்ஜி.
பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்னை எது என்று கேட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்க்கமாக ஆலோசித்து, உடனடியாக, துணிச்சலாக முடிவெடுக்கும் தலைமை இல்லாததுதான்.
காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஒதுக்கீட்டில் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல், ராணுவத்துக்குக் கொள்முதல் செய்ததில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல் என்று ஏதாவது ஒரு ஊழல் புகார் தினந்தோறும் அலையலையாக மக்களைத் தாக்கி வருகிறது.
அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து, ஏதாவது ஒரு காரணத்துக்காக எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன.
எந்த விஷயத்திலும் தடைகள், தயக்கங்கள், தாமதங்கள் என்று நம்பிக்கையை இழக்க வைக்கும் சம்பவங்களே நடக்கின்றன. நாட்டின் தலைமையோ, இவையெல்லாம் தீரும் அல்லது தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையைத் தரும் வகையில் நிலைமை இல்லை.
இதுதான் இந்த நாட்டின் இப்போதைய மிக முக்கியப்பிரச்னை என்று நான் கருதுகிறேன். இதை எல்லோரும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
அரசியல் தலைமை வலுவாக இருந்தால்தான் நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பிக்கையோடு செயல்பட முடியும். அது இப்போது இல்லை என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டும் நிலையில் இருக்கிறோம்," என்றார் பிரேம்ஜி.
No comments:
Post a Comment