நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் தியேட்டரை பெங்களூருவில் ஒரு அமைப்பு முற்றுகையிட்டது. இதையடுத்து படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் வெளியேறினர். படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படம், தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்த படம் பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள ஒரு தியேட்டரிலும் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த நிலையில், பிரவீண் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷ்ண வேதிக அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென "வேலாயுதம்" படம் திரையிட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும், கர்நாடக ராஜ்யோத்சவா தினத்தையொட்டி, தமிழ் உள்பட மாற்று மொழி படங்களை திரையிடக்கூடாது என்றும், எனவே காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டினர். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து நேற்று அந்த தியேட்டரில் வேலாயுத பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து பிரவீண் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், "கர்நாடகத்தில் ராஜ்யோத்சவா விழாவை ஒரு மாதம் கொண்டாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதுவரை பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் கன்னட படங்களை மட்டுமே திரையிட வேண்டும். தமிழ் உள்பட வேறு எந்த மொழி படங்களையும் திரையிடக்கூடாது. இதுகுறித்து கன்னட சினிமா வர்த்தக சபை மற்றும் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment