தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் அமைப்பினருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், படத்தை திரையிட்டு காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லுங்கள், என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் கரண், அஞ்சலி நடித்த படம் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்". டைரக்டர் வடிவுடையான் இயக்கி உள்ளார். இந்த படம் குமரி மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் நடந்தபோதே எதிர்ப்புகள் கிளம்பியது. படப்பிடிப்பு குழுவினர் மீதும் தாக்குதல் நடந்தது. இருந்தும் படம் முழுவதும் எடுக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை வெளியிட கூடாது என்று தமிழ்நாடு லயன்பால் அசோசியேசன் என்ற அமைப்பு, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 50 பேர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை வெளியிடக்கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன் பின்னர் அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் சஜிவ்கேசன் அளித்த பேட்டியில், தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் குமரி மாவட்ட மக்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்த்தோம். அப்போது படப்பிடிப்பு குழுவினர் படம் உருவானதும் அதை எங்களுக்கு போட்டு காண்பிப்பதாக கூறி இருந்தனர். ஆனால் இப்போது படத்தை வெளியிட அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் டிரைலரும் தயாராகிவிட்டது. அதில் கூட குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகளும், போலீஸ் நிலையத்தை சூறையாடுவது போலவும் காட்டப்படுகிறது. எனவே இந்த படத்தை திரையிடக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.
இதனிடையே போராட்டம் நடத்துபவர்கள் பத்தை பார்த்துவிட்டு போராட்டம் நடத்துங்கள், நாங்கள் படத்தை திரையிட்டு காண்பிக்க தயார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் பொருளாளர் எஸ்.தாணு அளித்துள்ள பேட்டியில், கரண், அஞ்சலி, சரவணன் ஆகியோர் நடித்து, வடிவுடையான் டைரக்ஷனில், செந்தில்குமார் தயாரித்த படம் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்". இந்த படத்தை தடை செய்யவேண்டுமென்று நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். `தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்க்காமல், அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று கூறுவது நியாயமல்ல. ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த படம் திரைக்கு வந்தால் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும். தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு கிரீடம் சூட்டக்கூடியதாக இருக்கும். எனவே, படத்தை தடை செய்ய கோருபவர்கள், அந்த படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, தங்கள் கருத்தை சொல்லலாம். அவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன்பிறகு போராடுவதைப் பற்றி முடிவு செய்யட்டும், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment