வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மின்தடையால் கோபமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை
தீவைத்து எரித்தனர்.
சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டுப்பிரச்சினை நிலவுகிறது. திருப்பூர்,
கோவை மாவட்டங்களில்
16 மணிநேரம்
மின்சாரம் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டுவிட்டு
சாலைமறியல் ஈடுபடுகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலும் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆற்காடு அடுத்த
மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து 9 மணிக்கு மின்சாரம் வந்தது. ஆனால் மின்சாரம் வந்த அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் விஷாரம்-வேலூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அலுவலகம் சூறை
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மேல் விஷாரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு
சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பூட்டை உடைத்து உள்ளே
சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் ஆவணங்கள், பீரோ ஆகியவற்றை வெளியில் எடுத்து வந்து
போட்டு தீ வைத்து கொளுத்தினர்.
தீயணைப்பு வாகனம் மீது கல்வீச்சு
மேலும் மின்சார அலுவலகத்தையும் தீ வைத்து கொளுத்தினர். இதனையடுத்து ஆற்காடு தீயணைப்பு
நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் மேல்விஷாரத்துக்கு உடனடியாக வந்தது. அதற்கு எதிர்ப்பு
தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு வாகனத்தை நோக்கி கற்களால் எறிந்தனர். இதில்
அதன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
போலீஸ் தடியடி
பொதுமக்கள் ஆத்திரமுடன் இருப்பதை அறிந்த உடன் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
உயர் அதிகாரிகள் அங்கு நின்றிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள்
கலைந்து செல்லவில்லை. அதற்குப் பதிலாக சிலர் போலீசார் மீது கற்களை வீசினார்கள். அதை
தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள். மேலும்
அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை
தொடர்ந்து அங்கிருந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில்
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திடீர் சாலை மறியல் வேலூர்- விஷாரம் சாலையில் சிலமணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மின் வாரிய அலுவலகம் தீவைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மின்சார
அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment