2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பதவி விலக தேவை இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து உள்ளார். 2007-ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்த போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், அந்த அலைவரிசையை ஏலம் மூலம் விற்குமாறு வற்புறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து இருக்காது என்று கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் எழுதிய கடித விவரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. நியூயார்க் நகரில் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கை பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், இந்த பிரச்சினைக்காக ப.சிதம்பரம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்தார்.
மன்மோகன் சிங் கூறுகையில்; "எதிர்க்கட்சிகள் இப்படி கோரிக்கை விடுப்பது ஒன்றும் புதிது அல்ல. அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. அப்படி அவர்கள் நடந்து கொள்வதில் புதிது ஒன்றும் இல்லை. எனவே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.
ப.சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்கும் ஆதரவு தெரிவிப்பீர்களா? என்று கேட்டதற்கு; எல்லா மந்திரிகளுமே எனது முழு நம்பிக்கையை பெற்றவர்கள்தான் என்று மன்மோகன்சிங் பதில் அளித்தார். பிரணாப் முகர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியூயார்க்கில் இந்த பிரச்சினை தொடர்பாக மன்மோகன்சிங்கை சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
No comments:
Post a Comment