திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் நிலவுகிறது. ஆனால் இதுகுறித்து விஜயகாந்த் மெளனம் காத்து வருவதால், அதிமுகவுக்கு மறைமுகமாக தேமுதிக ஆதரவு தருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது தேமுதிக. கடைசி வரை ஒரு சீட் கூட கொடுக்காமல் அதிமுக டபாய்த்து விட்டதால், அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் விஜயகாந்த். ஆனால் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் குறித்து மட்டும் அவர் வாய் திறக்காமல் உள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் தனித்துப் போட்டியா, திருச்சி மேற்கிலும் போட்டியிடுவோமா என்பது குறித்து அவர் இதுவரை விளக்கவில்லை.
இதனால் தேமுதிக தொண்டர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். தேமுதிக, முழுமையாக அதிமுக கூட்டணியிலிருந்து வெளி வந்து விட்டதா, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்தான் தனித்துப் போட்டியா, திருச்சி மேற்கில் போட்டியிடுகிறோமா இல்லையா என்பது குறித்து அவர்கள் கட்சித் தலைமையின் விளக்கத்திற்காக காத்துள்ளனர்.
இருப்பினும் அதுகுறித்து தேமுதிக தலைமையிலிருந்து யாரும் வாய் திறப்பதாகவே தெரியவில்லை. மாறாக பெருத்த அமைதி காக்கிறார்கள். தேமுதிக திருச்சி மேற்கில் போட்டியிடாது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இதன் மூலம் அங்கு மறைமுகமாக அதிமுகவை அது ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேல் மட்ட அளவில் அதிமுகவுடன் அதுகுறித்து தேமுதிக தரப்பில் பேசி முடித்து விட்டதாகவும் பேச்சு நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்தான் தேமுதிக தனியாக போட்டியிடும். அதேசமயம், சட்டசபை இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அது தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
கூட்டணியிலிருந்து தேமுதிக முழுமையாக வெளிவந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவை சமாளிப்பது, கட்சியை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக சிரமம் என்று விஜயகாந்த் கருதுகிறாராம். இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த அவர் திருச்சி மேற்கு குறித்து மெளனம் காத்து வருவதாக தெரிகிறது.
ஒரு வேளை வேட்பாளரை அறிவித்தாலும் கூட அது கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையிலான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நாளையுடன் திருச்சி மேற்குத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment