தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே உருவான புதிய கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று புதிய கூட்டணியை அறிவித்தன. இந்தக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மார்க்சிஸ்ட் அழைத்து வருகிறது.
இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் நேற்றிரவு தேமுதிக சென்னை மாநகராட்சிக்கான 200 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும் தனது கட்சியின் மேயர் வேட்பாளர்கள் பட்டியலையும் தேமுதிக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர்களை முழுமையாக அறிவித்த பின், இடப் பங்கீடு எப்படி நடக்கும் என்பது குறித்து இரு கட்சியினர் இடையிலும் குழப்பம் நிலவுகிறது.
மேலும் மார்க்சிஸ்ட் வந்தால் மட்டும் போதாது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வந்தால் தான் இந்தக் கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் முழுமையாகக் கிடைக்கும் என்று தேமுதிக கருதுவதாகவும் தெரிகிறது. இதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடத்திக் கொண்டே, அதிமுக ஸ்டைலில் அடுத்த வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டதாகத் தெரிகிறது.
ஆனாலும் இந்த விஷயத்தில் சுமூகமான முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் நம்புகிறது. இரு கட்சிகளுமே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட போதிலும், பேச்சுவார்த்தை நடத்தி, அதில் தேவையான மாற்றங்களை செய்து கொள்வோம். வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதுதான் என்கிறது மார்க்சிஸ்ட் தரப்பு.
No comments:
Post a Comment