செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், டிவி வீடியோகிராபர்களை தொடர்ந்து தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடாவடியாக நடந்து கொள்வதால் ஆவேசமடைந்த செய்தியாளர்கள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குள் நுழையாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அதுகுறித்து விளக்குவதற்காக நிருபர்களை தேமுதிக் தலைவர் விஜயகாந்த் விடுத்த அழைப்பையும் செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை நகரில்தான் அத்தனை அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் உள்ளன. அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்வது வழக்கம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிருபர் என பத்திரிக்கை அலுவலகங்கள் ஒதுக்கி ஒவ்வொரு கட்சி செய்தியையும் சேகரிப்பது வழக்கம்.
இதற்காக கட்சி அலுவலங்களுக்குச் செல்லும் நிருபர்கள் அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்து செய்திகளைச் சேகரித்து வருவது வழக்கமான ஒன்று. எந்தக் கட்சி அலு்வலகத்திற்குள்ளும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கிராபர்கள் சுதந்திரமாக சென்று வர முடியும். ஆனால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக அலுவலகத்திற்குள் மட்டும் ஒரு நிருபர் கூட சாதாரணமாக நுழைந்து விட முடியாது.
ஏதோ அது மைசூர் அரண்மனை போலவும், அங்கு ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்து கிடப்பது போலவும் கருதிக் கொண்டு வாசலிலேயே வாட்ச்மேனை வைத்து நிறுத்தி கெடுபிடியாக பேசி அனுப்பி விடுவது அங்கு சகஜமான காட்சி. ஆனால் அதையும் மீறி, தேமுதிகவும் ஒரு கட்சியாகி விட்ட காரணத்தால் அது குறித்த செய்திகளையும் மக்களுக்குத் தர வேண்டுமே என்பதற்காக இந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு செய்தியாளர்கள் அங்கு தினசரி போகத்தான் செய்கிறார்கள். தினசரி அவமானங்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமைக் கழக அலுவலத்தில் செய்தியாளர்கள் நிரந்தரமாக குவிந்துள்ளனர். ஆனால் அவர்களை ஏதோ நாயைப் போல கருதி நடத்துகிறார்கள் தேமுதிகவினர். கடும் வெயில் அடித்து வரும் நிலையில், அலுவலகத்திற்குள்ளேய நுழைய விடாமல் கேட்டோடு நிறுத்தி வைத்து வருகிறார்கள்.
திமுக, அதிமுக கூட தங்களை இப்படி நடத்தியதில்லையே என்று கொதித்துப் போன செய்தியாளர்கள் நேற்று விஜயகாந்த்திடம் நேரடியாகவே குமுறித் தள்ளி விட்டனர்.
அதற்கு அவரோ, உங்களுக்கு எப்படி வேலை உள்ளதோ அது போல எனது கட்சி நிர்வாகிகளுக்கும் பல வேலைகளைக் கொடுத்துள்ளேன். நீங்கள் உள்ளே வந்தால் அதெல்லாம் பாதிக்கப்படும் என்று வித்தியாசமான பதிலைக் கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று காலை தா.பாண்டியன் தலைமையிலான சிபிஐ குழுவினர் தேமுதிக அலுவலகம் வந்தனர். அங்கு விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சில்இடப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை வாட்சமேன்களை வைத்து வழக்கம் போல கடுமையாகப் பேசி வெளியே நிறுத்தி விட்டனர் தேமுதிகவினர். இதனால் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கடும் கோபமடைந்தனர். இருந்தாலும் செய்தியை மட்டுமே மனதில் கொண்டு அனைவரும் வெளியே காத்திருந்தனர்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை உள்ளே விடுமாறு விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். ஆனால் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை.நாங்கள் உள்ளே வர முடியாது என்று கூறி புறக்கணித்தனர். இத் தகவல் விஜயகாந்த்துக்குக் கூறப்பட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை தேமுதிக நிர்வாகிகள் சிலர் வந்து சந்தித்து பேசி காலையில் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து சமரசம் செய்தனர்.
No comments:
Post a Comment