தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினருக்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மற்றும் ஆளுநர் ரோசய்யா, தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளது திமுக.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ள இந்த புகார் மனுக்கள் இன்று அனுப்பப்பட்டன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு வழக்குகளின் கீழ் திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசின் அதிகார துஷ்பிரயோகத்தில் பல்வேறு வகைகளிலும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
சிறை அதிகாரிகள், திமுக பிரமுகர்களை வாய் மூலமாகவும், நடத்தை மூலமாகவும் கேவலமாக நடத்தி வருகின்றனர். மோசமான அணுகுமுறை அவர்களுக்குக் காட்டப்படுகிரது.
சிறைக்குள், யாருமே தங்க முடியாத மோசமான சூழல் கொண்ட இடத்தில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினர் பலருக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகள் உள்ளன. அவற்றுக்கான மருந்துகளை முறையாக உட் கொள்ளக் கூட சிறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் திமுக கரை வேட்டியான கருப்பு சிவப்பு நிறப்பட்டை அணிந்த வேட்டிகளை அணியவும் அனுமதி மறுக்கிறார்கள்.
மொத்தத்தில், சிறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக அநியாயமான, அராஜகமான, நியாயமற்ற முறைகளை கையாளுகிறார்கள். சட்டவிரோதமான முறைகளை செயல்படுத்துகிறார்கள். சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு அராஜக வழியில் செயல்படுகிறார்கள்.
இவர்களின் செயல்கள் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல் செயலாகும். இது அரசியல் சாசனச் சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து மனித உரிமை மீறல் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, கே.பி.பி.சாமி, என்.கே.கே.பி.ராஜா, எம்.எல்.ஏக்கள் செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பல திமுக தொண்டர்கள் மீ்து குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்களில் கேபிபி சாமி கொலை வழக்கில் கைதாகி உள்ளே அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment