தமிழ் சினிமா இசை வெளியீட்டின் உச்சம் என்று புகழும் அளவுக்கு பிரமாண்டம், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் நடந்தது சூர்யா நடிப்பில, ஆ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள உதயநிதியின் ஏழாம் அறிவு பட இசைவெளியீட்டு விழா.
தமிழில் மிகுந்த எதிர்ப்பார்க்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஏழாம் அறிவு இசை வெளியீடு சென்னை வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது.
விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். சூர்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துவிட்டனர் என்றால் மிகையல்ல.
வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு நல்ல கலைநிகழ்ச்சியைப் போல இசை வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
க்யூட் ஜோடி என்று சினிமாவில் பெயர் வாங்கிய ஜெய் - அஞ்சலிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். சும்மா சொல்லக் கூடாது, விழாவுக்கான காம்பியரிங் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாகத் தொகுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
படத்தின் ட்ரெயிலர் அத்தனை பேரையும் பிரமிக்க வைத்துவிட்டது. இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், விஜய், நடிகர் தனுஷ் என வந்திருந்த அத்தனை பேரும் பாராட்டித் தள்ளினர்.
"ஒரு நல்ல ட்ரைலர் பார்த்தவுடன் புரியக்கூடாது. அதை மெய்ப்பிக்கிறது முருகதாஸின் இந்த ஏழாம் அறிவு ட்ரைலர். காட்சிகளின் பிரமாண்டமும் நேர்த்தியும் என்னை வாயடைக்க வைத்து விட்டது," என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
இயக்குநர் விஜய் கூறுகையில், "இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குநர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது," என்றார்.
பாடல்களை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ஹீரோ சூர்யா, நாயகி ஸ்ருதி உள்ளிட்ட ஏழாம் அறிவு குழுவினர் வெளியிட, அதனை விழாவுக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சிவகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
படத்தின் இரு பாடல் காட்சிகளை முன்னோட்டமாகத் திரையிட்டுக் காட்டினர். பின்னர் அனைத்துப் பாடல்களையும் மேடையில் பாடி ஆடி பரவசப்படுத்தினர் இஷா ஷெர்வானி, லட்சுமி ராய் உள்ளிட்டோர்.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது, இரு வெளிநாட்டு கலைஞர்கள் செய்து காட்டிய அருமையான ஜிம்னாஸ்டிக் காட்சி. 10 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அதேபோல, படத்தின் சிறப்புகள் குறித்த லேசர் நிகழ்ச்சியும் பிரமாதமாக அமைந்திருந்தது.
பாடி ஆடி பரவசப்படுத்திய சூர்யா!
பொன்னந்தி மாலைநீ... என்ற பாடலை முதல் முறை கேட்டபோதே அரங்கம் ஆர்ப்பரித்து ஆடியது. இன்னொரு பாடலுக்கு படத்தின் நாயகன் சூர்யா மேடையேறி, நடன இயக்குநர் ஷோபி குழுவினருடன் இணைந்து ஆடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன் பேசும்போது, "ஒரு தமிழ்ப் பெண்ணாக எனக்கு இது மிக முக்கியமான படம். இப்படி ஒரு மிகப் பெரிய, திறமையான டீமோடு இணைந்து பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்," என்றார்.
சூர்யா-முருகதாஸ்-ஸ்ருதிக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!
ஏழாம் அறிவு இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கமல் அளித்த வாழ்த்துச் செய்தி, ஆடியோ விஷுவலாக ஒளிபரப்பப்பட்டது.
தனது வாழ்த்தில், "திறமையும் வெற்றியும் ஒருங்கே அமைவது அரிதாக நடக்கும் விஷயம். இந்தப் படத்தில் மிகச் சிறந்த திறமையாளர்கள் இணைந்துள்ளனர்.
அவர்களோடு என்மகள் ஸ்ருதி இணைந்து பணியாற்றுவது, அவருக்கு கிடைத்த அதிருஷ்டம் என்பேன்," என்றார்.
மொத்தத்தில் ஏழாம் அறிவு என்ற படத்தின் உலகத்தரத்துக்கு ஒரு அசத்தல் முன்னோட்டமாக அமைந்தது இந்த இசை வெளியீட்டு விழா என்றால் மிகையல்ல!
No comments:
Post a Comment