2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
2ஜி ஊழலைத் தடுக்க முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் தவறிவிட்டதாகவும், இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் சிபிஐக்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும், சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு, தன்னிச்சையான அமைப்பு.
இந்த விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் எந்த புதிய விஷயமும் இல்லை.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதன்முறையாக புதிய ஆவணங்கள் (சாமி தாக்கல் செய்த ஆவணங்கள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ ஆய்வு செய்து பரிசீலிக்கும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறான நடைமுறையாகும்.
சிபிஐயின் சார்பில் மத்திய அரசு எந்தக் கருத்தையும் எங்கும் தெரிவிக்க முடியாது. புதிய ஆவணங்கள் எதையும் சிபிஐ பரிசீலிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்றார்.
No comments:
Post a Comment