2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச்சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத்தின் நேர்மையில் தனக்கு துளி கூட சந்தேமில்லை என்று கூறிவிட்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரமும் கடுப்பில் உள்ள நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார் பிரணாப்.
அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் பிரதமரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.
அப்போது, இந்தக் கடிதம் வெளியே லீக் ஆனதற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இன்று நாடு திரும்பும் பிரணாப் சோனியாவையும் நேரில் சந்தித்து விளக்கம் தரவுள்ளார்.
No comments:
Post a Comment