என் பொறுப்பில் உள்ள தென் மண்டலப் பகுதிகளில் திமுக அமோக வெற்றியைப் பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுக சார்பில் மதுரை மேயர் தேர்தலில் போட்டியிடும் பாக்கியநாதன், திமுக கவுன்சிலர் வேட்பாளர்கள் அழகிரியை இன்று அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி பேசுகையில்,
நான் பொறுப்பேற்றுள்ள தென் மண்டல பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெறும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும் நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விருப்ப மனுக்கள் குவிந்துள்ளது.
தி.மு.க.வை அழித்துவிட கனவு கண்டவர்களுக்கு வருகிற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா கழக நண்பர்களின் சிலரின் பெயர்களை கூறி பழி வாங்குவேன் என்று கூறினார். இதை அவர் தேர்தல் வாக்குறுதியாக கருதுகிறார்.
மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை விட்டு விட்டு தி.மு.க.வினர் மீது பழி வாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க.வினர் மீது பழி வாங்கும்படலம் மதுரையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இதை மக்கள் புரிந்து விட்டார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் தவறு செய்து விட்டோமே என்று தற்போது பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டி தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளிப்பார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு ஜெயலலிதா எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வை பழி வாங்குவதுதான் தனது சாதனையாக ஜெயலலிதா நினைக்கிறார். மதுரையில் எனது முயற்சியால் கொண்டுவரப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது மூடும் நிலையில் உள்ளது. நவீன இலவச கழிப்பிடங்களில் தற்போது காசு வசூலிக்கின்றனர்.
மேலூர் கிரானைட் தொழிற்சாலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்றார் அழகிரி.
No comments:
Post a Comment