மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த தாமதமான மேல் முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு மீ்ண்டும் உயிர் பெற்றிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் தினகரன் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் அழகிரியை விட ஸ்டாலினுக்கே செல்வாக்கு உள்ளதாகவும், அவரே கருணாநிதியின் அடுத்த வாரிசு என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைப் பார்த்த மதுரை அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்து வன்முறை வெறியாட்டத்தில் குதித்தனர்.
தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஊழியர்களை உயிரோடு தீவைத்துக் கொளுத்தி சாம்பலாக்கினர். மதுரை நகரிலும் அவர்களின் வன்முறை கொடூரமாக இருந்தது. இதனால் மதுரை மக்கள் பெரும் பீதியடைந்தனர். பல பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன, கல்வீச்சு என மதுரை நகரையே போர்க்கள பூமி போல ஆக்கி விட்டது அழகிரி ஆதரவுக் கும்பல்.
தினகரன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட தீயில் வினோத், முத்துராமலிங்கம், கோபி ஆகிய மூன்று பேர் கொடூரமாக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அட்டாக் பாண்டி, திருச்செல்வம், சரவணமுத்து உள்ளிட்ட 17 திமுகவினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதேபோல கவனக்குறைவாக இருந்ததற்காக டி.எஸ்.பி.ராஜாராம் மீதும் வழக்குப் பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட், கடந்த 2009, டிசம்பர் 9ம் தேதி அத்தனை பேரையும் விடுதலை செய்து அதிர்ச்சித் தீர்ப்பை அளித்தது.
அதன் பின்னர் இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யவே இல்லை. அதாவது தி்முக ஆட்சிக்காலம் முடியும் வரை மேல் முறையீடு குறித்து சிபிஐ சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் தற்போது திடீரென விழித்துக் கொண்டு மேல் முறையீடு செய்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த நெருக்குதல்களே சிபிஐ மேல் முறையீடு செய்யக் காரணம்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில்,
ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறி உள்ளார். யாரெல்லாம் வாகனங்களுக்கு தீ வைத்தது, யாரெல்லாம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர் என்று குற்றவாளிகளை அடையாளம் காட்டி உள்ளனர். அவரது சாட்சியத்தை விசாரணை கோர்ட் கருத்தில் கொள்ளாமல் முற்றிலுமாக நிராகரித்து இருக்கக்கூடாது.
சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் அடையாள அணிவகுப்பின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டவில்லை என்று கூறுவது தவறானது. இந்த வழக்கில் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ்சாட்சியாக மாறிய போதிலும் கூட, வீடியோ ஆதாரம், பத்திரிகை புகைப்பட ஆதாரம் போன்ற தொழில்நுட்ப சாட்சியங்களை கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை.
குற்றம் நடந்ததற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்ததற்கு கால தாமதம் ஆனதற்கும் சிபிஐ விளக்கம் அளித்திருந்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டது.
மேலும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
அட்டாக் பாண்டி தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment