2ஜி ஊழல் விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தத்தில் உள்ள தகவல்களை நிதியமைச்சகம் தன்னிச்சையாக தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், 2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு விற்பதை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் வெளியாகி ப. சிதம்பரத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் அவரை உடனே பதவி விலகுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்த மறுபுறம் சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை என்று பிரதமர் அவருக்கு ஆதரவாக உள்ளார்.
இதையடுத்து மன்மோகன் சிங் ஊழல் அமைச்சரைக் காப்பாற்றக் கூடாது என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தக் கடிதம் குறித்து நிதியமைச்சகத்திடம் ப.சிதம்பரம் விளக்கம் கேட்டு நேற்று ஒரு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முந்தைய கடிதத்திற்கு விளக்கம் அளித்து தற்போது ஒரு கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் 4 பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். இதன் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நிதியமைச்சகம் எழுதிய கடிதத்தால் தான் சிதம்பரத்திற்கு இத்தனை பிரச்சனை வந்துள்ளது என்ற நினைப்பை மாற்றத் தான் பிரணாப் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதில் 2ஜி ஊழல் விவகாரத்திற்கும் ப. சிதம்பரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2ஜி ஊழல் குறித்த கடிதமும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 18 பக்கங்கள் கொண்ட குறிப்பையும் நிதியமைச்சகம் தன்னிச்சையாக தயாரிக்கவில்லை என்றும். சட்ட அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்சகம், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து தான் அந்த குறிப்புகள் எல்லாம் கொடுக்கப்பட்டன என்று பிரணாப் தனது விளக்கக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
மேலும் நிதியமைச்சகத்தின் கடிதத்தை வைத்து யாரையும் குற்றம் சாட்டிவிட முடியாது என்றும் பிரணாப் அதில் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலாளருடன் கலந்தாலோசித்த பிறகே நிதியமைச்சகம் அந்த கடிதத்தை எழுதியது. கடந்த மார்ச் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் அமைச்சரவை செயலாளரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிதி, தொலைத்தொடர்பு, சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்திற்குப் பிறகு தான் நிதியமைச்சகம் 12 பத்தி கொண்ட கடிதத்தை எழுதி அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியது. அவர் அதை திருப்பிக் கொடுக்கையில் 14 பத்திகளாக இருந்தது என்று பிரணாப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
பிரணாப் முகர்ஜி பார்த்த பிறகு தான் அந்த கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. அதை அவர் சரிபார்த்திருக்கிறார் என்றால் அதை அவர் அனுப்பியதாகத் தானே அர்த்தம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment