2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக சிபிஐ புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது.
இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந் நிலையில் இப்போது கூறப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த புதிய குற்றச்சாட்டை சுமத்தும் மனுவை தாக்கல் செய்தார். அதில் ராசா தவிர அவரது முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா மீதும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்க் பெகுரா மீதும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டை சிபிஐ சுமத்தியுள்ளது.
மேலும் திமுக எம்பி கனிமொழி, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகியோர் மீது 409-வது பிரிவின் கீழ் அத்துமீறல் (criminal breach) மற்றும் 120பி பிரிவின் கீழ் சதித் திட்டம் தீட்டுதல் (criminal conspiracy) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை சிபிஐ சுமத்தியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment