2ஜி விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரான இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
சிபிஐ பரிசீலிக்கும்-மத்திய அரசின் வழக்கறிஞர்:
ஆனால், இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சாமியின் மனுவில் உள்ள விஷயங்கள் குறித்து சிபிஐ பரிசீலிக்கும் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடுகையில்,
நான் தனி நபருக்காக ஆஜராகவில்லை. மத்திய அரசுக்காக ஆஜராகி உள்ளேன். சுப்பிரமணிய சாமி இதேபோன்ற மனுவை சிபிஐ நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவரது இந்த மனுவை ஏற்கக்கூடாது. இதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. மேலும், 2ஜி வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கை இனிமேலும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க தேவையில்லை. அந்தப் பொறுப்பை சிபிஐ நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் சாமியின் மனுவில் உள்ள விஷயங்கள் குறித்து சிபிஐ பரிசீலிக்கும் என்றார்.
சிபிஐ பரிசீலிக்காது-சிபிஐ வழக்கறிஞர்:
ஆனால், சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறியது. சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த முடியாது. சிபிஐ ஒரு சுயேச்சையான அமைப்பு. எனவே, சிபிஐ சார்பில் அறிவிப்பு வெளியிடவோ, உத்தரவாதம் அளிக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
மேலும் சிதம்பரம் தொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் எந்த புதிய விஷயமும் இல்லை. இதனால் அதை சிபிஐ பரிசீலிக்காது என்றார்.
சிதம்பரத்தை விசாரிக்க ஆரம்பித்தால் என் ஜாமீன் தாமதமாகும்-ராசா:
முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமாரும், ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை என்றார். அவர் வாதாடுகையில், எனது கட்சிக்காரர் ஆ.ராசா மீதான வழக்கு விசாரணை தாமதமாகி வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததால், ஜாமீன் கேட்க முடியவில்லை. இந் நிலையில், ப.சிதம்பரம் பற்றி விசாரணை நடத்தினால், வழக்கு மேலும் காலதாமதமாகி விடும். எனவே, மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது.
ஸ்பெக்ட்ரம் விசாரணை முடிவடைந்து விட்டதாக சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. ஆனால், இன்னும் விசாரணை நடந்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறுகிறது. எனவே, விசாரணை முடிந்து விட்டதா? இல்லையா? என்பதை முதலில் சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும்.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் முன்பு, ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதால், குற்றச்சாட்டு பதிவு மேலும் தாமதம் ஆகக்கூடும்.
எனவே எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள். குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்வரை ஜாமீன் அளிக்கக்கூடாது என்ற முந்தைய உத்தரவை சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இன்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
இடையில் புகும் பிரஷாந்த் பூஷன்:
இந் நிலையில் இன்று பொதுநல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் அன்னா ஹசாரேவின் குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷண் இன்று ஆஜராகி வாதாடுகிறார். 2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு அவர் வற்புறுத்துவார் என்று தெரிகிறது.
நிதித்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு:
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய குறிப்பை தங்களிடம் ஏன் முதலில் தாக்கல் செய்யவில்லை என்று நிதித்துறை செயலாளர் ஆர்.எஸ்.குஜ்ராலை நேரில் அழைத்து வரும் 13ம் தேதி விளக்கம் கேட்க, இந்த ஊழல் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்ற கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர்கள் நிர்பேந்திர மிஸ்ரா, பிரிஜேஷ் குமார் ஆகியோரும் 13ம் தேதி ஆஜராகுமாறு நாடாளுமன்ற கூட்டுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து வரும் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சிபிஐ விளக்கம் அளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment