உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த தொகுதிகள், பொதுத் தொகுதிகள், எவை பெண்களுக்கான தொகுதிகள், தனித் தொகுதிகள் எவை என்ற அடிப்படை விவரங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுக மட்டும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக நடைபெற வேண்டிய தேர்தலில், இவ்வாறு ஒரு கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தகவலைத் தருவது ஜனநாயகமா? இதற்காகவே இந்த ஆட்சியினர் மீது ஒரு வழக்குத் தொடரலாம். ஆட்சியினர் தொகுதிகளை மறைத்து வைத்த காரணத்தால், இதுவரை பொதுத் தொகுதியாக இருந்து பலரும் அங்கே போட்டியிட எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அந்தத் தொகுதியை தனித் தொகுதி என்று அறிவித்த காரணத்தால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் வேட்புமனு வாங்க வேண்டிய இடத்துக்குச் சென்று அங்கே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைப் பார்த்து தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்! வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22-ம் தேதி தொடக்கம் என்ற போதிலும், அந்தத் தேதியில் சென்று வேட்பு மனுக்களைக் கேட்ட போது அந்த மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து இதுவரை வந்து சேரவில்லை என்ற பதில்களே பல இடங்களில் கிடைத்துள்ளன.
இதற்கு முன்பு நடைபெற்ற எந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் இப்படி நடைபெறவில்லை.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் ஆட்சியினரை எதிர்த்துப் போட்டியிட இருக்கிறோம். ஆட்சியினர் என்றால், கடந்த பேரவைத் தேர்தலில் மிருக பலத்தோடு வெற்றி பெற்றுள்ள ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறோம்.
நமக்குள்ள போட்டியின் காரணமாகவும், நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தோம். இந்த அரசியல் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டபேரவையில் ஆளுங்கட்சி வரிசையிலே உள்ள முதல்வரும், அமைச்சர்களும் திமுகவினரைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், நாம் எழுந்து நின்று வழக்கம் போன்று மக்கள் பணியாற்றிட வேண்டுமென்றால், நமக்குள்ள அரிய வாய்ப்பாக வந்துள்ள இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை முறையாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்தத் தேர்தலில் அனைத்து விதமான முறைகேட்டிலும் ஈடுபடக்கூடும். ஏராளமான பணத்தை வாரி இறைத்து, எப்படியாவது வெற்றி பெற முயற்சிப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்குப் பாடத்தைக் கற்பிக்க முயற்சிக்க வேண்டும்.
தப்பித்தவறி அவர்கள் மீண்டும் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டால் பின்னர் நாட்டு மக்களைப் படாதபாடுபடுத்துவார்கள்.
மேலும், திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் கடந்த முறை போட்டியிட்டிருந்தால் அவர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை காட்டியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டாதவர்களின் வேட்பு மனுக்களையெல்லாம் ரத்து செய்வதற்கான முயற்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment