ஜன்லோக்பால் மசோதா மட்டும் தற்போது அமலில் இருந்தால் ஊழல் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார். சிதம்பரம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை உடனே பதவி விலகுமாறு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு ஆதரவாக உள்ளார். 2ஜி ஊழலில் ப. சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது என்று பிரதமருக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சிதம்பரம் விவகாரம்: பிரதமரை சந்திக்கும் பிரணாப்
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது. ப. சிதம்பரத்தை 2 ஜி ஊழல் விவகாரத்தில் மாட்டிவிடத் தான் பிரணாப் இந்த கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடன் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ப. சிதம்பரத்தை உடனே பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங் நியூயார்க்கில் நடந்து வரும் சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.
சிதம்பரம் அமெரி்க்காவில் இருக்கும் பிரதமரை தொடர்பு கொண்டு பதவி விலக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை பிரதமர் ஏற்கவில்லை. நாடு திரும்பிய பிறகு இது குறித்து முடிவு எடுக்கலாம் என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு விழாவில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ளார். அவர் பிரதமரை சந்திக்க இன்று மதியம் நியூயார்க் செல்கிறார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
2ஜி ஊழல் கடித விவகாரம் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. நாடு திரும்பிய பிறகு தான் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.
பிரதமரை அவசரமாகச் சந்திக்கவிருப்பதற்கான காரணத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அவர் நாளை பிரதமரை சந்தித்து கடிதம் அனுப்பியதற்கான விளக்கத்தை அளிப்பார் என்று தெரிகிறது.
நேற்று பிரணாப் முகர்ஜி, சிதம்பரத்துடன் போனில் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. பிரணாப் மற்றும் பிரதமர் அடுத்த வாரம் தான் நாடு திரும்புகின்றனர். அதன் பிறகே காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து இந்த கடித விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
2ஜி வழக்கில் யாரையாவது இழுத்துவிடும் ராசா: பாஜக
2ஜி வழக்கில் யாரையாவது மாட்டிவிடுவதே முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவுக்கு வழக்கமாகிவிட்டது என்று முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், பத்திரிக்கையாளருமான அருண் ஷோரி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கம் நடக்கவில்லை. ஒரே சூன்யமாகத் தான் உள்ளது. என்ன முன்பு யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசில் போர் சூழல் நிலவுகிறது.
மினிட்ஸ் புக்கில் உள்ள தகவல்களை அரசு மறைக்கிறது. பிரதமரின் பார்வைக்கு இவற்றை ஏன் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை. கபில் சிபலும் உண்மையை மறைக்கிறார். இந்த விவரம் எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தான் வெளிவந்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறி்த்து ப. சிதம்பரமும், ஆ. ராசாவும் சேர்ந்து முடிவு எடுத்துள்ளார்கள் என்பதை நிதியமைச்சரின் அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் விலையை நிர்ணயித்துள்ளனர்.
2ஜி வழக்கில் யாரையாவது மாட்டிவிடுவதை ராசா வழக்கமாகக் கொண்டுள்ளார். முதலில் பிரதமரை மாட்டிவிட்டார், தற்போது சிதம்பரத்தை மாட்டிவிட்டுள்ளார். அடுத்து ஒட்டுமொத்த அமைச்சரவைக்கே இந்த விவகாரம் தெரியும் என்று கூறுவார். இந்த குற்றச்சாட்டுகள் ராசா விடுதலையாக வழிவகுத்துவிடும். எனவே, இது குறித்து உச்ச நீதிமன்றம் தான் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
2ஜி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் வேடிக்கை பார்க்கிறார். இந்த 2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்ததில் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றால் தொலைத்தொடர்புத் துறைக்கு எந்த ஆதாயமும் கிடைப்பதாக இல்லை.
கடந்த ஜனவரி, பிப்ரவரி, ஜூன் மாதங்களில் 2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ என்னிடம் 15 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டது. நானும் பேக்ஸ் மூலம் பதில் அனுப்பினேன். ஆனாலும் இந்த விவகாரம் இழுத்துக் கொண்டே போகிறது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண யாரும் விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.
லோக்பால் விவகாரம் நாடு முழுவதும் பூதாகாரமானதற்கு 2ஜி தான் காரணம் என்றார்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ப. சிதம்பரம் உடனே பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment