சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் படு சுவாரஸ்யமாகியுள்ளது. மேயர் பதவிக்கு திமுக மற்றும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரு வேட்பாளர்களுமே சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். அதேபோல இருவருமே பலமான ஆட்கள் என்பதோடு, இருவருமே சிறப்பான செயல்பாட்டை நிரூபித்துக் காட்டியவர்கள் என்பதால் போட்டி படு சூடாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவி என்பது மிகவும் பாரம்பரியமானது. பல்வேறு ஜாம்பவான்கள் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர். இடையில் கராத்தே தியாகராஜன் (துணை மேயராக இருந்தபோது சில காலம் மேயர் பொறுப்பைக் கவனித்தார்) போன்றவர்களும் இந்தப் பதவிப் பொறுப்பை வகித்துள்ளனர் என்பது தனிக் கதை.
இந்த நிலையில் தற்போதைய மேயர் பதவித் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மேயராக இருக்கும் மா.சுப்பிரமணியன் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களால் சென்னையைக் கலக்கு கலக்கியவர் என்பது யாராலும் மறுக்க முடியாதது. எத்தனையோ திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியின்போது சென்னைக்குக் கிடைத்தன. அதனால் சென்னை மக்களுக்கு நிறைய பலன்களும் கிடைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை. சில பல குறைபாடுகள் இருந்தாலும் கூட மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்பட்டார் என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
இதற்குப் பரிசாகவே அவருக்கு மீண்டும் மேயர் பதவியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை வழங்கியுள்ளது. ஸ்டாலினின் நிழலாக கருதப்படும் மா.சு, மாசற்ற தனது செயல்பாட்டால் சென்னை மாநகர மக்களைக் கவர்ந்த ஒருவர்.
மறுபக்கம் அதிமுக சார்பில் நிற்பவர் சைதை துரைசாமி. இவரும் சாமானியமான ஆள் இல்லை. தூய உள்ளத்துடன், சமுதாயப் பணியிலும், அரசியல் பணியிலும் ஈடுபட்டுள்ள பழம்பெரும் அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டிருப்பவர். சத்தம் போடாமல் வேலையில் தனது செயல்பாடுகளைக் காட்டுபவர். அடாவடி அரசியலுக்கும் இவருக்கும் வெகு தூரம்.
சைதாப்பேட்டை பகுதி குடிசைவாழ் மக்களுக்கு கல்வியறிவு புகட்ட கடுமையாக பாடுபட்டவர், பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து அந்தப் பகுதி மக்களின் அன்பைப் பெற்றவர். ஒரு காலத்தில் திமுக சார்பில் சைதை கிட்டு அதிரடியாக அரசியல் செய்து வந்த நேரத்தில் அவருடன் சரிக்குச் சமமாக போட்டி போட்டு அமைதியான முறையில் அரசியல் செய்தவர் சைதை துரைசாமி.
கடந்த சட்டசபைத் தேர்தலில் வலுவான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட்டு கடும் போட்டியையும், நெருக்கடியையும் கொடுத்தவர். ஸ்டாலின் வெல்ல முடியுமா என்று கேட்கும் அளவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியவர் சைதை துரைசாமி. கடைசியில் ஸ்டாலின் தப்பித்தோம் பிழைத்தோம் என்றுதான் ஜெயிக்க முடிந்தது.
மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் இலவசமாக சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான ஒருவர் சைதை துரைசாமி.
மேயர் பதவிக்குப் போட்டியிடும் மா.சுவும் சரி, சைதை துரைசாமியும் சரி இருவருமே சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள், அங்கேயே வசித்து வருபவர்கள். இருவருமே சிறப்பான செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள். எனவே இவர்களுக்கு இடையிலான இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் சென்னை மெகா மாநகராட்சியின் முதல் மேயராகப் போவது யார் என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பு சென்னை மக்கள் மத்தியில் நிறையவே உள்ளது.
No comments:
Post a Comment