2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ள புதிய குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா இல்லையா என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதன் மூலம் அவர் மீது தனக்குள்ள அதிருப்தியை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் ப.சிதம்பரத்தை குறை சொல்லி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழக்கும் என்று திமுக கருதுகிறது.
2ஜி விற்பனையில் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் பரிந்துரைகளை ராசா புறந்தள்ளியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள நிதியமைச்சகக் கடிதத்தின் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசாவின் நிலைப்பாடு நியாயமானதுதான் என்பது தெளிவாகிறது என்று திமுக தரப்பு கூறுகிறது.
ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் நான் முழு விவரங்களை தந்து வந்தேன். இந்த விஷயத்தில் நான் மட்டும் முடிவெடுக்கவில்லை. என்னுடன் பிரதமரும் சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று கூறி வந்தார். ஆனால், அதை காங்கிரஸ் தரப்பு ஏற்க மறுத்ததோடு, ராசா மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்தது போல வழக்கை சிபிஐ நடத்தியதை, ரசித்தது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மட்டுமல்லாமல் ப.சிதம்பரமும் தங்களை கைவிட்டுவிட்டதாக திமுக தரப்பில் நீண்ட நாட்களாகவே கோபம் இருந்து வந்தது.
இந் நிலையில் தான் ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டி எழுதப்பட்டுள்ள நிதியமைச்சகத்தின் கடிதம் திமுக தரப்புக்கு பெரும் தெம்பைத் தந்துள்ளது.
இதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அளித்த பேட்டியும் உறுதி செய்தது. அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தவறாமல் தெரிவித்து வந்தார் ராசா. இதைத் தான் நிதியமைச்சகத்தின் இந்தக் கடிதம் உறுதி செய்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் பதவி விலக வேண்டுமா என்பது குறித்து ப..சிதம்பரம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இந் நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளின்போது, இந்தக் கடித விவரத்தை முன் வைத்து ராசா, கனிமொழி தரப்பு வாதாடும் என்று தெரிகிறது. மேலும் சிதம்பரத்தோடு சேர்த்து பிரதமரையும் விசாரிக்க வேண்டும் என்று ராசா தரப்பில் கோரிக்கை வலுப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
No comments:
Post a Comment