உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக அழைக்காமலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் பின்னால் ஓடுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லையே?
பதில்: திமுக ஆட்சி காலத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதிலும் 2008-ம் ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு விழாவினையொட்டி 7 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஐந்தாண்டு தண்டனை அனுபவித்தவர்களும் விடுவிக்கப்பட்டனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அவ்வாறு தண்டனை அனுபவித்த சுமார் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்களுக்கு விடிவு காலம் ஏற்படுமென்று எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும், ஆனால் அதிமுக ஆட்சியினர் கருணை காட்டாததால் ஏமாந்துவிட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
கேள்வி: முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீனில் விடுதலையாவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டதைப் பற்றி?
பதில்: பொன்முடி மட்டுமல்ல, வீரபாண்டி ஆறுமுகம், கே. என். நேரு போன்றவர்களை கூட, ஒரு வழக்கில் ஜாமீன் பெறுகின்ற நேரத்தில் மற்றொரு வழக்கினைக் காட்டி கைது செய்து சிறையிலேயே அடைத்து வைத்திருப்பதைக் காணும் போது, இந்த நடவடிக்கைகள் செய்ததாகக் கூறப்படுகிற குற்றங்களுக்காக அல்ல;
இது பழி வாங்கும் செயல்தான் என்பதை யாருமே உணர்ந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் பொன்முடி திருவாரூரில் பேசியது 5-6-2011 அன்று. அவர் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசினார் என்பதற்காக எப்போது கைது செய்திருக்கிறார்கள் தெரியுமா? 15-9-2011. அதாவது 3 மாதங்களுக்குப் பிறகு.
கேள்வி: நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரதம் "ஸ்டண்ட்'' என்றும், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக நடத்தப்படுகின்ற ஒன்று என்றும் மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி கூறியிருக்கிறாரே?
பதில்: நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரித்து தனது கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வாழ்த்து தெரிவிப்பதற்காக அனுப்பியிருக்கிறார்.
மேலும் அவர் பதவியேற்பு விழாவிற்கு இவர் சென்றார் - இவரின் பதவியேற்பு விழாவிற்கு அவர் வந்தார். ஆனாலும் ஜெயலலிதாவின் தோழமைக் கட்சியாகத்தான் தமிழகத்திலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க, அதிமுக அழைக்காமலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் பின்னால் ஓடுகிறது. இந்த நிலையில் மோடியின் உண்ணாவிரதத்தை யெச்சூரி கண்டிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இலவசப் பொருள்கள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் தேதி தாமதம்:
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவசப் பொருள்கள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் மாநிலத் தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: "உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர், தனித் தொகுதிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அனைவருக்கும் பொதுவாக அறிவிக்க வேண்டியதை ஆளும்கட்சிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனியாகத் தெரிவித்திருக்கிறதுபோலும். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவசர அவசரமாக தனித் தொகுதிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இலவசப் பொருள்கள் விநியோகம், ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சலிங் ஆகியவற்றை முடித்துவிட்டு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்ற மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
2008ல் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளும், 60 வயதுக்குட்பட்ட 5 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு 400க்கும் அதிகமான கைதிகள், தாங்கள் விடுதலையாவோம் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பாதாக செய்தி வந்துள்ளது. வெளியில் இருப்பவர்களை உள்ளே அனுப்பும் அதிமுக அரசு, உள்ளே இருப்பவர்களை எங்கே விடுவிக்கப் போகிறார்கள்? என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment