அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கிடையே ஏற்கனவே இருந்த கோஷ்டி பிரச்னையை பெரிதாக்கிவிட்டது என்கின்றனர் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள். அத்தோடு பிரதமரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என்கின்றனர். இந்த பிரச்னை ஆரம்பித்த உடன், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சிதம்பரம் ஆகியோர் விவகாரத்தில் இறங்கினார்கள். பிறகு அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட பிரச்னை பெரிதாகியது. சில நாட்களுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி மற்றும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த விவகாரத்தைக் கையாண்டனர். பேச்சு வார்த்தை நடத்தி முடிவிற்கு வரும் நிலையில், மீண்டும் அந்த இரண்டு அமைச்சர்கள் பிரச்னையைக் கிளப்பினர் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இதனால் பிரதமரால் எதுவும் செய்ய முடியவில்லை. நேரடியாக அவரே கோதாவில் இறங்கினார். பார்லிமென்டில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசினார். அன்னா ஹசாரேவைப் பாராட்டியதோடு உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்; கடிதமும் எழுதினார். அதோடு, பார்லிமென்டில் அன்னா ஹசாரேவின் மசோதாவை விவாதிக்க ஏற்பாடும் செய்து விட்டார் பிரதமர். இதற்கிடையே, காங்கிரஸ் அமைச்சர்களிடையே ஒரு எஸ்.எம்.எஸ்., உலாவிக் கொண்டிருக்கிறது. பெண் இல்லாத வீடு எப்படி பாழாகும் என்பது இப்போது தெரிந்து விட்டது. காரணம், சோனியா ஊரில் இல்லை என்கிறது அந்த எஸ்.எம்.எஸ்.,
அச்சத்தில் காங்கிரஸ் தலைவர்கள்
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ., விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான்கு கோடியில் ஆரம்பித்த இவரது சொத்து, இப்போது 300 கோடிக்கும் மேலாக உள்ளது. இதை விசாரிக்க வேண்டும் என ஆந்திர காங்கிரஸ் அமைச்சர், ஐகோர்ட்டில் மனு செய்ய சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஜெகனின் பல கம்பெனிகளில் சி.பி.ஐ., ரெய்ட் நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் சி.பி.ஐ., விசாரணைக்கு தடை போடவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஜெகனுக்கு ஆதரவாக இருப்பதால், சி.பி.ஐ., ரெய்டால் காங்கிரஸ் மகிழ்ச்சியடைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஜெகனை ஒரு வழியாக சி.பி.ஐ.,யால் ஒழித்து விடலாம் என்று ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், ஜெகனோ அதிரடியில் இறங்கப் போகிறார் என்ற செய்தி அடிபடுகிறது. விரைவில் ஜெகனை சி.பி.ஐ., விசாரிக்கப் போகிறது. அப்போது, காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை விலாவாரியாக சொல்லப் போகிறாராம் ஜெகன். இந்த விஷயம் கசிந்து, டில்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிய வர, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரசை ஆந்திராவில் வளர்த்த ராஜசேகர ரெட்டி மீது, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. விபத்தில் இறந்த அவர் மீது எப்படி குற்றம் சாட்டலாம். இதெல்லாம் டில்லி தலைவர்கள் சொல்லி தான் நடக்கிறது. காங்கிரஸ் மேலிடம் உட்பட அகமதுபட்டேல் மற்றும் சிலருக்கு எவ்வளவு பண பட்டுவாடா நடந்தது என்பதை சி.பி.ஐ., விசாரணையில் ஜெகன் தெரிவிக்கப் போகிறார் என்கின்றனர் ஜெகனுக்கு நெருக்கமானவர்கள். இதனால் என்னாகுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் டில்லி காங்கிரஸ் தலைவர்கள்.
No comments:
Post a Comment