ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டியது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் விற்கப்பட்டவுடன் அதற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியது ஆகியவை தொடர்பாக தயாநிதிமாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறிய சிபிஐ இப்போது அவருக்கு எதிராக விரைவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பல்டி அடித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை முன்பு நிர்வகித்து வந்த சிவசங்கரன் சிபிஐ முன்பு ஆஜராகி தயாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். அப்போது தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் தன்னை மிரட்டினர், மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி நிர்ப்பந்தப்படுத்தினார். இதனால் வேறு வழியில்லாமல் நான் விற்றேன் என்று கூறியிருந்தார்.
ஏர்செல்லை மேக்சிஸ் வாங்கிய பின்னர் அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை படு வேகமாக வழங்கினார் தயாநிதி மாறன். அதற்குப் பிரதிபலனாக சன் டிவி குழுமத்தில் மிகப் பெரிய முதலீடை மேக்சிஸ் செய்தது என்பது குற்றச்சாட்டாகும். இதன் விளைவாகவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ, சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த அறிக்கையில், தயாநிதி மாறனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் சிபிஐ மீதே பலருக்கும் சந்தேகம் வந்தது.
இதை வெளிப்படுத்தும் வகையில் சிபிஐ முறையாக, சரியாக, நியாயமாக விசாரணை நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் புகார் கூறினார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.
இந்த நிலையில் தற்போது சிபிஐ பல்டி அடித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், நாங்கள் தயாநிதி மாறன் நிரபராதி என்று கூறவில்லை. விரைவில், அனேகமாக இந்த மாத இறுதியில் இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க தயாநிதி மாறன் ஏன் தாமதம் செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது வேண்டும் என்றே செய்யப்பட்ட தாமதமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்ற எதிர்பார்ப்பால் தற்போது சிபிஐ பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment